“வாங்கின கடனை கொடுக்க முடியாத நீ ஒரு முழம் கயிற வாங்கி தூக்கு போட்டு சாவு” – திட்டி அடித்து உதைத்த தனியார் நிதி நிறுவன ஊழியர் – போலீஸார் வலை!
திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள மும்முடிசோழமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மகேந்திரன் (39). இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆட்டோ ஓட்டுநரான மகேந்திரன் குடும்ப சூழ்நிலைக்காக புள்ளம்பாடியில் உள்ள எல்.&டி என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவிக்குழு மூலம் ரூ 28 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
கடன் வாங்கிய பிறகு இரண்டு தவணை செலுத்தியுள்ளார். கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறபித்ததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தவணைத்தொகை செலுத்த சொல்லி விக்னேஷ் கடந்த 2 மாதமாக அதிகமாக தொந்தரவு கொடுத்ததால் மன உலைச்சலில் இருந்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர் மகேந்திரன்.
நேற்றிரவு தனியார் நிதி நிறுவன ஊழியர் மகேந்திரனை தொலைபேசியில் திட்டியுள்ளார். பின்னர் லால்குடியிலிருந்து வீட்டிற்க்கு மகேந்திரன் சென்றபோது தனியார் நிதி நிறுவன ஊழியர் விக்கி என்ற விக்னேஷ் (25) என்பவர் மகேந்திரனை வழி்மறித்து, வாங்கின கடனை கொடுக்க முடியாத நீ ஒரு முழம் கயிறு இருந்தா தூக்கு போட்டு சாவ வேண்டியது தானே என திட்டி, தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மகேந்திரன் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஊரடங்கு முடியும்வரை தவணைத்தொகை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்தும்,தனியார் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திருச்சியில் அடுத்தடுத்து இதுபோல் சம்பவங்கள் அரங்கேறி கொண்டே வருகிறது.
அரசு பிறபித்த உத்தரவினை மதிக்காத நிதி நிறுவனங்கள் மீதும், கடன் வசூல் என்ற பெயரில் கடன்தார்ர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகும் என்கின்றனர் கடன்தாரர்கள்.