10 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம் - அமைச்சர்கள் துவங்கி வைப்பு

10 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம் - அமைச்சர்கள் துவங்கி வைப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தங்கத் தேரோட்டம் தொடங்கியது.  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தங்கத்தேரை  வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், கடந்த 2011 ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக  தங்கத் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பின் படி கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரை தூய்மைபடுத்தி மின் விளக்குகள் பொருத்துப் பணிகள் நடைபெற்றது.

பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேரோட்டம் இன்று தொடங்கியது. இனி வரும் காலங்களில் திருவிழா காலங்களை தவிர்த்து நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் ரூ.1500 பணம் கட்டி தங்கத் தேர் இழுக்கலாம். தங்கத் தேர்  இழுக்கும் பக்தர்கள் மாலை 7 மணிக்கு மேல் தங்கத்தேர் இழுப்பதற்கு கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn