திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில் உச்சியில் மகா தீபம்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில் உச்சியில் மகா தீபம்!

திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், இன்று மாலை 6:00 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று தடுப்புக்கான பொது முடக்கம் அமலில் உள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். 

Advertisement

ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தன்று, 273 அடி உயரம் கொண்ட மலைக்கோட்டை உச்சியில் பிள்ளையார் கோவிலுக்கு அருகில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கடந்த 27 ம் தேதி, மலை மீது வைக்கப்பட்ட கொப்பரையில் 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரித்த திரியை ஊற வைத்தனர். 

கார்த்திகை தீபத் திருநாளான இன்று மாலை, 5:30 மணிக்கு, தாயுமானவ சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, மேள தாளம் முழங்க, அதிலிருந்து தீப ஜோதியை மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைக்கப்பட்ட கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதை தரிசித்த பின், திருச்சி மாநகரப்பகுதி மக்கள், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ளதால், கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, இன்று மாலை 3:00 மணி முதல், கோவிலில் தீப தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு சிறப்பு பூஜை & மகா தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS