"கல்வி கற்றுக் கொண்டே மக்கள் பணியிலும் சிறப்பாக செயல்படுவேன்"- 22 வயதில் கவுன்சிலரான சினேகா பேட்டி !

"கல்வி கற்றுக் கொண்டே மக்கள் பணியிலும் சிறப்பாக செயல்படுவேன்"- 22 வயதில்  கவுன்சிலரான சினேகா பேட்டி  !

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுயேச்சையாக போட்டியிட்ட இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவி சினேகா (வயது 22) 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் 2 சுயேச்சை உள்ளிட்ட 7 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்துள்ளார். இவர்களில் அமமுக வேட்பாளர் மற்றும் 191வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்தார்.5 வது வார்டில் மொத்தம் 1,579 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆயிரத்து 1057 வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் தலைமுறையினர் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வந்தாலும் மக்களால் அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவது எதிர்காலத்தில் இளைய தலைமுறை ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடுவதற்கான ஓர் சூழல் உருவாகி உள்ளது என்பதற்கு இவர்கள் வெற்றியே சான்றாகும். வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நடுவே திருச்சி விஷனிடம் கூறுகையில்... சினேகா, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை நம்பி வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.

அப்பா செல்வராஜ் மக்களுக்கு சமூக அக்கறையோடு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பெண்களுக்கு இந்த தொகுதியை ஒதுக்கப்பட்டதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது "படித்தவர்களே அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன்". கல்வி ஒருபோதும் சமூக சேவைகள் செய்வதற்கு தடையாக இருக்காது இந்த கல்வி மூலமே என் மக்களுக்கு உதவ நினைக்கிறேன், ஐந்தாவது வார்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தருவேன்.

எங்கள் வார்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வசதி இல்லை அதை பெற்றுதருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து நிறைவேற்றுவேன். அதேபோன்று கழிவறை வசதி, அங்கன்வாடி கட்டிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் எங்கள் வார்டு மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்படி நான் கூறிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். அனைவரும் பெருமைப்படும் வகையில் சிறந்த இளம் கவுன்சிலர் என்ற பெயர் எடுத்து இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாய் இருப்பேன் என்று சினேகா தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn