தமிழ்நாட்டில், கூடுதல் சீட்டு; கூட்டணி ஆட்சி - அதுதான் எனது விருப்பமும் கூட - திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி
கடந்த, 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, மகாத்மா காந்தி, முதல் முறையாக காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர், தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன், 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைமையகமான அருணாச்சலம் மன்றத்தில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், காந்தியின் திருவுருவப் படத்திற்கு, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்டத் தலைவர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜன், கலை உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர், அருணாச்சலம் மன்றத்தில் முன்புறம் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியபோது.... "காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட, தான் எம்எல்ஏவாக வேண்டும். கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும். தான் மந்திரியாக வேண்டும் என ஆசைப்படுகிறான்.
அதிக சீட்டுகள்; அதிகாரத்தில் பங்கு என்பது அடிமட்ட தொண்டனின் விருப்பம். நானும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் தான். ஆசைப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் அது பேராசையாக இருக்கக் கூடாது. கூட்டணி தலைமையிடம் முன்வைக்க வைக்கவேண்டிய கருத்துக்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.
ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடலாம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்று மறைந்த தலைவர்களின் பெயர்களை அனைவரும் பயன்படுத்துவது வழக்கம்தான். எம்ஜிஆர் புகழை பலரும் போற்றுகின்றனர்.
ஆனால், அவர் இறந்த பின்பு அவரை யாரும் விமர்சிப்பது இல்லை. அப்படி விமர்சித்தால் மக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால்தான் அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் போற்றுகிறார்கள். அந்த வகையில், தவெக தலைவர் விஜய், எம்ஜிஆரை போற்றுவதில் ஒன்றும் வியப்பில்லை. அதே நேரத்தில், அவர் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என்பதும் ஏற்புடைய கருத்தல்ல.
அது அவரவர்களுடைய விருப்பம். கூட்டம் கூடும் மக்கள் நெரிசலில் சிக்குவார்கள் என்று கூறுவதை தவிர்த்து, 'தலைவர்' விஜய் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யக் கூடாது. அப்படி செய்யவும் முடியாது என்பது எனது கருத்து" என்றார். மேலும், "மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் ஒரு "மர்ம கை" இருக்கிறது என்று முன்னாள் தலைமை நீதிபதி கூறி இருக்கிறார். கை என்றால் காங்கிரஸ் கை என்று நேரடியாக அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
அந்தக்கை, பாஜக உடைய கையா? அல்லது அந்நிய நாட்டின் கையா? என்பதை தீவிரமாக ஆராய்ந்து கண்டறிய வேண்டும். அங்கு பூரண அமைதி திரும்ப தேவையான உரிய நடவடிக்கைகளை அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு உடனடியாக செய்ய வேண்டும்" என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision