வாசிப்பை நேசிப்போம் தொடக்க விழா

வாசிப்பை நேசிப்போம்  தொடக்க விழா

இளம் பருவத்தினரிடையே வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு அமைப்புகளும் தன்னார்வலர்களும் இணைந்து, 'வாசிப்பை நேசிப்போம்' என்ற முன்னெடுப்பை நேற்று திருச்சியில் தொடங்கியுள்ளனர். 

மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவுக்கு திருச்சி மாவட்ட நூலக அதிகாரி சிவகுமார் தலைமை தாங்கிப் பேசினார். வாசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகப் பொதுநூலகத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி அவர் விரிவாக எடுத்துக் கூறினார். பள்ளிகளிலும் அடுக்ககங்களிலும் வழங்குமுனை நூலகங்கள் அமைக்க விரும்புவோருக்கு உதவத் தயாராக இருப்பதாகவும், இந்த முன்னெடுப்புக்குப் பொது நூலகத்துறை முழு ஒத்துழைப்பை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யூத் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் மோகன் பேசுகையில், 'வாசிப்பை நேசிப்போம்' முன்னெடுப்பில் இணைந்து, கதை சொல்லுதல், புத்தக வங்கிகளை உருவாக்க உதவிதல் போன்ற செயல்பாடுகளில் பங்கெடுத்து, இயக்கத்தின் நோக்கம் வெற்றியடைய, யூத் எக்ஸ்னோரா உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார். 

இதேபோல், திருச்சி வாசகர் வட்டம், நூலக மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு (SALIS) & தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் (TNWAA) சேர்ந்து எடுத்த கூட்டு முயற்சியான 'தமிழ்நாடு வாசிப்பு இயக்கம்' திருச்சி விஷன், மக்கள் ஊடக மையம், பிரிட்டன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.

பள்ளிகளில் நூலகங்களை அமைத்தல், அதற்கான கொடையாளர்களைக் கண்டறிதல்,பொது நூலகத்துறையுடன் இணைந்து வழங்குமுனை நூலகங்களை அமைத்தல், குடியிருப்போர் நலச்சங்கங்களின் உதவியுடன் அடுக்ககங்களில் நூலகங்களை உருவாக்குதல், வாசித்த நூல்களை நன்கொடையாகப் பெற்று புத்தக வங்கிகளைக் கட்டமைத்தல், புத்தக வங்கிகளின் உதவியுடன் நடமாடும் நூலகங்களை உருவாக்குதல், பள்ளிகள், பூங்காக்கள், அடுக்ககங்களின் பொதுவெளிகளில் சிறார்களுக்குக் கதை சொல்லுதல்அருகிலுள்ள நூலகங்களில் அவர்களை உறுப்பினர்களாக்குதல், புத்தகங்கள், வாசிப்பின் அவசியம் பற்றி இளம்தலைமுறையினரிடம் பேசி, அவர்களது ஆர்வத்தைத் தூண்டுதல்

சமுக அக்கறை கொண்ட பிரபலங்களைக் கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும் புத்தகங்கள் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் பேசவைத்தல், வாசித்தல் தொடர்பான போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்குதல், அதிக புத்தகங்களை வாசித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்குதல், தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் பற்றியும் மாணவர்களைக் கலந்துரையாடச் செய்தல், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் குழந்தைகளுக்கான படிக்கும் பகுதியை (reading corner) உருவாக்குதல், பொது இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் கதைசொல்லுதல், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் இயக்கத்தின் செயல்பாடுகளை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்லுதல்

வாசிப்பின் அவசியம் குறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பகுதிவாரியாக குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் பேசி நூலகங்களை உருவாக்குதல் என்பன போன்றவற்றை உள்ளடக்கிய செயல்திட்டம் ஒன்றினை உருவாக்கிச் செயல்படுத்திட அக்கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டுசெல்லவும் செம்மையான முறையில் செயல்படுத்தவும் அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் +91 99019 65430 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்  எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தன்னார்வலர்கள் whatsapp குழுவில் இணைய : https://chat.whatsapp.com/LSEWpXEMQ4OJzw9GzDpe1b

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision