ஜே.இ.இ. நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு உதவித்தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

ஜே.இ.இ. நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு உதவித்தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவுறுத்தலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையும், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழக நிறுவனமும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு JEE நுழைவுத் தேர்விற்கான பயிற்சி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, இப்பயிற்சி வார இறுதி நாட்களில் திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழக நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்பயிற்சியில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சேதுபதி, மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி புகழரசி ஆகியோர் திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழக நிறுவனத்தில் இடம் கிடைக்கப்பெற்று கல்வி பயின்று வருகின்றனர். நடப்பாண்டில் இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில் விவசாயக் கூலித்தொழில் செய்து வரும் பெற்றோர்களான என்.பொன்னழகன், பி.பொன்னாத்தாள் ஆகியோரின் மகனும்,  மருங்காபுரி வட்டம்,  செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருமான பி.அருண்குமார் JEE முதன்மைத் தேர்வினை எழுதி (JEE ADVANCED) வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் பொதுப்பிரிவில் 12,175ஆவது இடமும், OBC பிரிவில் 2503ஆவது இடமும் பெற்று சென்னை I.I.T-யில் தேர்வாகி இடம் கிடைக்கப்பெற்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, இம்மாணவர் பி.அருண்குமாரை நேரில் வரவழைத்துப் பாராட்டி இவரது கல்விக்காக மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மற்றும் மாவட்ட நலப்பணி நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 85 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.  காசோலைகளைப் பெற்றுக் கொண்ட மாணவர், கல்விக்காக முக்கியத்துவம் வழங்கி வரும் தமிழக அரசிற்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். 

நடப்பு 2021-2022 ஆம் ஆண்டிற்கான பயிற்சிக்கு மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு JEE பயிற்சி  பெற்று  வருகின்றனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு வார இறுதி நாட்களிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடத்த பெறும் பயிற்சிக்கான முழு செலவையும், பேருந்து, உணவு மற்றும் தங்கும் இடவசதி உட்பட அனைத்து செலவினங்களுக்கான நிதியும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  வழங்கப்படுகிறது.  திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்பக் கழக நிறுவனத்திலிருக்கும் IGNITE மன்றத்தைச் சார்ந்த மாணவர்கள் பயிற்சியை சிறப்பாக வழங்கி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,