புதிய கல்வியாண்டில் திருச்சி மாவட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம் - மாணவர்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சி

புதிய கல்வியாண்டில் திருச்சி மாவட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம் - மாணவர்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. கடந்த ஓர் ஆண்டுகாலமாக பள்ளிகள் திறக்க இயலாத சூழ்நிலையால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகவும், அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்று வந்தனர்.

அதன்படி 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 19.06.2021 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கிட பள்ளிக்கல்வி ஆணையர் வழங்கிய உத்திரவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு பாடநூல்கள் விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.

மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காமல் அவர்தம் பெற்றோரை மட்டும் பள்ளிக்கு வரவழைத்து புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதன்படி திருச்சி மாவட்டம், தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் 2021-22ம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் பாடநூல்களை திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர் அருள்தாஸ் நேவீஸ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜீவானந்தன் உட்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி, உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி உள்ளிட்டவை வைக்கப்பட்டு பெற்றோர்களிடம் பாதுகாப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மேலும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரங்கள் குறித்த அட்டவணையையும் பெற்றோர்களிடம் வழங்கினர். இதுமட்டுமின்றி வருகை தந்த பெற்றோர்களிடம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் உள்ளதா? தொலைக்காட்சி உள்ளதா? என்ற கூடுதல் தகவல்களும் கேட்டு பெறப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF