தேசிய அறிவியல் தினம்! இன்று ஆசியாவின் முதல் தமிழக திருச்சி நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் தினம்!!

தேசிய அறிவியல் தினம்! இன்று ஆசியாவின் முதல் தமிழக திருச்சி நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் தினம்!!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7, 1888ல் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார்.
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார்.

ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.
தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார்.இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஆழப் பதிந்தது.

தண்ணீரிலுள்ள மூலக்கூறுகளால் சூரிய ஒளிச்சிதறல் ஏற்பட்டு கடல் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார் பிப்ரவரி 28, 1928 ல் இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். 1930ல் இந்த சிறப்பான ஆய்வுக்குத்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்’ தோன்றுவதை அவர் கண்டார். அவை ‘ராமன் வரிகள்’ என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு’ (Raman effect ) என்றும் பின்னாளில் அழைக்கப்படத் தொடங்கியது.இவர் நவம்பர் 21, 1970ல் பெங்களூருவில் தனது 82வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

ராமனின் இந்தக் கண்டுபிடிப்பு மற்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. உலகில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. ஏன்?, எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக உள்ளது. இந்த கேள்வி வேட்கையால் தான் விஞ்ஞானிகள், மின்சாரம், தொலைபேசி, கம்ப்யூட்டர், விமானம், செயற்கைக்கோள்கள், வாகனங்கள் என பல்வேறு பொருட்களை உருவாக்கினர். ஒரு அறிவியலாளரின் பயணமும் சிந்தனையும் பெரும் புரட்சி செய்ததனால்தான் இன்று நாம் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அறிவியலில் பெண்கள் என்ற கருப்பொருளில் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பெண்கள் உட்பட அறிவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

✒இரமேஷ்,
(உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி)