திருச்சியில் நள்ளிரவில் நடந்த அகோரிகளின் நவராத்திரி பூஜை

திருச்சியில் நள்ளிரவில் நடந்த அகோரிகளின்  நவராத்திரி பூஜை

திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி குருவான மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கிய நிலையில், முதல்நாள் ஜெய்அகோரகாளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாகபூஜை நடத்தினர்.

நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ராயாகத்தின்போது அகோரிகுருவான மணிகண்டன், ருத்ராட்சமாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னிகுண்டத்தில் இட்டு யாகபூஜை செய்தார். இந்த யாகபூஜையின் போது சகஅகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும், சங்குநாதங்கள் முழங்கியும், மந்திரங்களை ஓதினர். 

தொடர்ந்து ஜெய்அகோரகாளி, ஜெய்அஷ்டகால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision