கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு - திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று இக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மேடையின் அருகே நின்று கொண்டிருந்த முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி பேராசிரியருமான முகிலன் என்பவர் மேடை அருகே நின்று கொண்டிருந்த மைக்ரோ பயாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.
அதை மதிக்காமல் மாணவர் அங்கிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பணிகள் முடிந்து மாலை 4 மணியளவில் கல்லூரியில் இருந்து பேராசிரியர் முகிலன் வெளியே சென்ற பொழுது கல்லூரி மாணவர் மது போதையில் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆசிரியர் மாணவனின் கல்லூரி அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் இரவு 8 மணி அளவில் தனது சக நண்பர்கள் மற்றும் அடையாளம் தெரியாத முதலாம் ஆண்டு மாணவர் உள்ளிட்ட நான்கு பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து கல்லூரி வாசலில் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த வந்த ஜமுனாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முன்பு மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.