ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர்களின் தேர்வு தேர்ச்சி குளறுபடியினை சரி செய்ய கோரி திருச்சியில் மாணவிகள் தர்ணா போராட்டம்

ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர்களின் தேர்வு தேர்ச்சி குளறுபடியினை சரி செய்ய கோரி திருச்சியில் மாணவிகள் தர்ணா போராட்டம்

அனைத்து கல்லூரி மாணவிகள்  திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் கூறுகையில்... ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர்கள் 2018ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு முழுக்க தேர்வு எழுதிய மாணவர்களில் வெறும் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானவர்ளே தேர்ச்சி பெறுகின்றனர். 98% சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களை தோல்வி அடைய வைத்துள்ளனர். 


2018ஆம் ஆண்டு தேர்வு விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்களும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் பட்டயக் கல்வி ஆசிரியர்கள் பலருக்கும் 17பி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற கல்வியாண்டு பருவத் தேர்வின் போது கொரோனா பரவல் தீவிரம் உச்சத்தில் இருந்த நேரம். அப்போது நாடு முழுக்க அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, வகுப்புகள், தேர்வுகள் அனைத்துமே இணைய வழியில் நடத்தப்பட்டது. ஆனால் ஆசிரியர் கல்வி பட்டய மாணவர்களுக்கு மட்டும் நேரில் வரவழைத்து தேர்வு நடத்தப்பட்டது. அப்போதே மாணவர்கள் அரசிடம் இணைய வழியில் தேர்வை நடத்த கூறி கோரிக்கையும், போராட்டமும் நடத்தினர். ஆனால் சென்ற அதிமுக அரசு அதனை பொருட்படுத்தவே இல்லை. தேர்வு முடிவும் வழக்கம் போல் 95% அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவே இல்லை.

ஆசிரியர்களுக்கும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த கருத்து வேறுபாட்டு மோதலால் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு நிறுவனமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையே நடத்தாமல் இருக்கின்றனர். ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை அரசு கல்வி நிறுவனத்தை இழுத்து  மூட நினைப்பதாக சந்தேகம் எழுகிறது.

இந்த கல்வியாண்டுக்கான பருவத் தேர்வை தொடங்கி விட்டனர். தேர்வுக்கு தயாராக  மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கவில்லை. பல மாணவர்கள் தேர்வு கட்டணத்தையே செலுத்த முடியவில்லை. விடைத்தாள் திருத்தும்  பிரச்சினை முடிவுக்கு இன்னும் வராததால் தேர்வு எழுதினாலும் பழைய கதையே தொடரும் என்பதனால் மாணவர்கள் கவலையில் உள்ளனர். தேர்வுக்கு கால அவகாசம் வழங்கி ஒரு மாத காலம் வகுப்பறைகளில் பாடம் நடத்தி தேர்வு நடத்த வேண்டுமென்று மாணவர்கள்  போராடி வருகின்றனர்.

தமிழக அரசும், பள்ளி கல்வித் துறையும் உடனடியாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தேர்வு விடைத்தாள் திருத்தும் விவகாரத்திற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தலைமையில் ஆசிரியர் கல்வி இயக்குநர், தேர்வு துறை இயக்குநர், ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகளை கொண்ட கூட்டத்தை நடத்தி ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். அரசு நிறுவனமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடப்பு கல்வியாண்டிலேயே தொடங்க வேண்டும். தற்போது நடைபெறும் தேர்வினை ஒத்திவைத்து உரிய கால அவகாசம் வழங்கி மறு தேர்வு நடத்த வேண்டுமென்று தமிழக அரசையும், பள்ளிக் கல்வி துறையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn