தமிழ் மற்றும் ஆங்கிலவழி கல்வி முற்றிலும் இலவசம்! அசத்தும் திருச்சி அரசு பள்ளி!!
பிராட்டியூர் அரசுப்பள்ளி என்றால் நம் திருச்சியில் பல அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியான ஒரு பள்ளி. இப்பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் திருச்சி மக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுக்கும்.ஆண்டு விழா தொடங்கி அரசு விழாக்கள் வரை இப்பள்ளி மாணவர்களின் தப்பாட்டம் இல்லாத இடமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு திருச்சியில் ஒரு புகழ் பெற்ற பள்ளியாக பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கும் கற்றலுக்கும் இடைவெளியை நிரப்பி வருகிறது இந்த ஊரடங்கு. 2020 - 21 ஆம் கல்வியாண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டு உள்ளோம்.
இந்நிலையில் திருச்சி மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி கிராமப்புற மாணவர்களை சேர்க்கும் வகையில் இப்போதே தங்களது சொந்த செலவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண் கவரும் வண்ணங்களில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் வேலை மட்டும் அரசு வேலைகள் வேண்டும். ஆனால் படிப்பது மட்டும் அரசு பள்ளி வேண்டாம்! ஏன் அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில்லை என்பதே நிதர்சனம்! ஆனால் அந்தத் தடைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து கல்வியிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து செயல்படும் பள்ளியாக விளங்கி வருகிறது பிராட்டியூர் நடுநிலைப்பள்ளி.
இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவியிடம் பேசியபோது…"இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை எந்த கட்டணமும் நன்கொடையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் இப்போது 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வியுடன் சேர்த்து ஆங்கில பேச்சு பயிற்சி, கம்ப்யூட்டர், கராத்தே, சிலம்பம் மற்றும் நடனம் ஆகிய பயிற்சிகளும் தனியார் பள்ளிகளைப் போன்றே சீருடை, ஷூ,சாக்ஸ், புத்தகப்பை, அடையாள அட்டை, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறோம். இங்கு இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு இது தெரிவதில்லை!
அதனால் காந்திநகர், இனியானூர், சாந்தபுரம், சோழிங்கநல்லூர், தீரன் நகர், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வசதி குறைந்த பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் வைரஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த சுவர் விளம்பரங்களை செய்து வருகின்றோம். சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு 20 இடங்களில் எங்களது சொந்த பணத்தில் 22 ஆயிரம் செலவு செய்து விளம்பரம் எழுதி போட்டுள்ளோம். இதைப்பார்த்து பெற்றோர்கள் போனில் தொடர்பு கொள்கின்றன. அரசு எப்போது அறிவிக்கிறதோ அப்போது முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கும் இலக்குடன் பணியாற்றி வருகிறோம்" என்று அவர் கூறினார்.