திருச்சி மக்களை பீதியடைய செய்த 18 கிராம சொத்து யாருக்கு உரிமை ஆட்சியர் விளக்கம்
திருச்சி மாவட்டம், அந்தநல்லுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்புவாரியத்துக்கு சொந்தமான நிலம் என்ற தகவலால், கிராம மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிடைந்துள்ளனர். திருச்சி, முள்ளிக்கருப்பூரை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் திருச்செந்துறை கிராமத்தில் உள்ளது. அதில், ஒரு ஏக்கர் 2 சென்ட் நிலத்தை ராஜேஸ்வரி என்பவருக்கு கிரயம் செய்ய, கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி மூன்றாம் எண் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார்.
அங்கு சென்ற போது, இந்த நிலம் வக்புவாரியத்துக்கு சொந்தமானது என்றும், அதை பதிவ செய்ய, சென்னையில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.மேலும், திருச்செந்துறை கிராமத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும், வக்புவாரியத்துக்கு சொந்தமானது என்று பத்திரப்பதிவு துறைக்கு, தகுந்த ஆவணங்களுடன் கடிதம் அனுப்பி உள்ளனர், என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, வக்பு வாரியத்தின் கடிதத்தை எடுத்துக் காட்டி உள்ளனர். அதில், திருச்செந்துறை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி ராஜகோபால், திருச்செந்துறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தார், அதனால், அந்த கிராமமே கொந்தளித்துள்ளது.
இது குறித்து, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தனபால் கூறியதாவது...திருச்செந்துறை கிராமத்தில் உள்ள மொத்த நிலமும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது, என்று பத்திரப்பதிவு துறை அதிகாரிகள், கடந்த 5ம் தேதி தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த கிராமத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. கடந்த 1927–28 ம் ஆண்டுகளில், ரீ செட்டில்மெண்ட் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளது. அதில், முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலம் என்பதற்கான எந்த தகவலும் இல்லை. கிராம நிர்வாக ஆவணங்களில், முஸ்லிம்களின் வீட்டு மனையோ, நிலமோ இந்த கிராமத்தில் இல்லை.
இதே போல், திருச்சி நகரப்பகுதியிலும், வேறு சில கிராமங்களில் ஒரு சில பகுதிகளையும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளனர். வக்பு வாரிய நிலம் தொடர்பான கடிதம், 220 பக்கங்கள் கொண்டது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளனர்.
1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து, ஜீயபுரம் அவ்வையார் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் உற்சவம், பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவையெல்லாம், இந்த கிராமத்தில் ஹிந்துக்கள் தான் வாழ்ந்தனர் என்பதற்கான ஆதாரங்கள்.இதை உறுதிப்படுத்த, மேலும் சில ஆவணங்கள் தேவைப்படுவதாலும், பத்திரப்பதிவு துறையினர், இந்த கிராமத்து நிலங்களை பதிவு செய்ய மாட்டோம், என்று தவிர்த்து வருவதாலும், விரைவில் மாவட்டக் கலெக்டரையும், முதன்மை செயலாளரையும் சந்திக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கிராமம் மட்டுமல்ல திருச்சி மாவட்டத்தில் 18 கிராமங்களுக்கு இதே போன்ற நிலை உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். நிலத்தை விற்க முயற்சி செய்பவர்களும் மேலும் நிலத்தை ஏற்கனவே வாங்கியவர்களும் வீடு கட்டியவர்களும் தற்பொழுது கலக்கமடைந்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கேட்ட பொழுது
பதிவுத்துறை ஆவணங்களில் 1928 முதல் நில உரிமையாளர்களிடமே அந்த சொத்துகள் இருப்பதாகவும் அதனை தற்பொழுது பதிவுத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இவை அனைத்தும் நில உரிமையாளர்கள் பெயரில்தான் ஆவணங்கள் உள்ளது பதிவுத்துறைக்கு ஆவணங்கள் அனுப்பபடும் யாரும் பதட்டமடைய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO