18 ஆயிரம் தடுப்பூசிகளை நாளைக்குள் போட மாவட்ட நிர்வாகம் விறு விறு ஏற்பாடு- அலைமோதிய மக்கள் கூட்டம்

18 ஆயிரம் தடுப்பூசிகளை நாளைக்குள் போட மாவட்ட நிர்வாகம் விறு விறு ஏற்பாடு- அலைமோதிய மக்கள் கூட்டம்

கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி முகாம்கள் அமைக்கப்பட்டு வயது ஏற்றார் போல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் திருச்சியில் 4 கோட்டங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயதில் இருந்து 44 வயதுக்குள் உள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி இல்லாததால் இந்த முகாம் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு திருச்சி மாவட்டத்திற்கு 15 ஆயிரம் கோவிசீல்டு மற்றும் 3 ஆயிரம் கோவாக்சீன் என மொத்தம் 18 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதனையடுத்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு கோட்டங்களில் பொதுமக்கள் இன்று தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மேலும் திருச்சி மாவட்டத்திற்கு நேற்று வழங்கப்பட்ட 18 ஆயிரம் தடுப்பூசிகளை நாளைக்குள் போட்டு முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரமாக காத்திருந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். பயனாளிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC