அரசு விழாவிற்காக யார் மண் அள்ளுவது என்ற பிரச்சனை - அரசு அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த திமுகவினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் வரும் 2025 ஜனவரி 28ஆம் தேதி பாரத சாரண சாரணியார் இயக்கத்தின் வைர விழா மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழா பெருந்திரளணி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலை மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக கிராவல் மண் தேவைப்படுகிறது.
இதற்காக மணப்பாறை விடத்திலாம்பட்டியில் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் கிராவல் மண் அல்ல வட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இப்பணியை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் இருந்த கிராவல் மண் அள்ளும் பணி தொடங்கியது. மண் அள்ளிக் கொண்டு வந்த டிப்பர் லாரிகளை திமுகவினர் விடத்ததிலாம்பட்டியில் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர்மன்ற துணைத் தலைவரின் கணவர் கோபி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரின் கணவர் ஆண்டாள்மணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மரியோ இன்னாசியை ஆபாச வார்த்தைகளால் திட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் செல்வம் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திமுக வினவிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக நிர்வாகிகள் ஒருவருக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கலாம் மற்ற ஒப்பந்ததாரர்களையும் கலந்து ஆலோசித்து அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அப்பகுதி பொதுமக்களும் தங்கள் பகுதியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செய்வதறியாது தவித்த அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் மண் அள்ளுவதில்லை என உறுதியளித்தனர். இதனையடுத்து டிப்பர் லாரிகளில் நிரப்பப்பட்ட மண் விடத்திலாம்பட்டி மயான பாதைக்காக கொண்டு சென்று கொட்டப்பட்டது.
கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்ற கிழக்கு ஒன்றிய செயலாளர் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் என்பதும், அதனை தடுத்த திமுக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்கள் என்ற நிலையில் நேருவின் ஆதரவாளருக்கு இவ்வாறு அனுமதி வழங்கலாம் எங்களுக்கு தான் அனுமதி வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் மகேஷின் ஆதவாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு அதிகாரிகளை வசைபாடியுள்ளனர்.
அரசு விழா ஏற்பாடு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன் நின்று செய்து வரும் நிலையில் ஆதவளர்களே பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் என்பதால் அமைச்சரை மீறி அவரது ஆதரவாளர்கள் செயல்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்களது பிரச்சினையில் அதிகாரிகள் சிக்கி திண்டாடி வருகின்றனர்.
அரசு விழா முன்னேற்பாடு பணிகளுக்காக மண் அள்ளப்படுவதை திமுக நிர்வாகிகளே தடுத்து பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் பேசும் பொருளாகியுள்ளது. அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision