மாணவ-மாணவிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன ரகசியம்

மாணவ-மாணவிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன ரகசியம்

தழைக்கட்டும் நமது தலைமுறை என்ற தலைப்பில், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையேற்று உரையாற்றினார்.

திருச்சி மண்டல காவல் துறைத்தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அப்போது பேசிய சைலேந்திரபாபு நான் முதல்வன் திட்டம் மாணவர் நலனுக்காகவே தமிழக முதல்வர் உருவாக்கி உள்ளார். மாணவர்கள் தான் எடுத்துள்ள பாடக்கல்வியை முழு ஈடுபட்டுடன் கற்க வேண்டும். வருங்காலத்தில் செயற்கை அறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ) முக்கியத்துவம் பெறும். எனவே மாணவர்கள் இதில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.

வருங்கால திட்டத்தை மாணவர்கள் தற்போதே வகுத்துக்  கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்கள் திறமை, ஆற்றல்களை படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் போட்டி நிலவுகிறது. எனவே போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்துல் கலாம் போன்ற சான்றோர்கள் தங்கள் சொந்த முயற்சிகளால் முன்னேறியவர்கள், அவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை விழிப்புடன் கவனிக்க வேண்டும். அரசியல் ரீதியாக, அரசு ரீதியாக சர்வதேச நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது குறித்து தெரிந்து கொள்ள செய்தித்தாள் படிக்க வேண்டும். மாணவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடிதம், கட்டுரை எழுதுவதாய் இருந்தால் கூட சிறு தவறு இன்றி எழுத வேண்டும்.
தமிழ்,ஆங்கில மொழித்திறனுடன் உடல் மொழியும் முக்கியம். இதனை அறிந்து கொண்டால் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் உடல், பொருள், ஆவியை தங்களுடை குழந்தைகளுக்காக அர்ப்பணித்து உள்ளார்கள். எனவே அவர்களை கைவிட்டு விடாதீர்கள்.

நீங்க குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், அதில் முழு திறனை வெளிப்படுத்துங்கள். பின்வரும் காலத்தில் அது உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO