உணர்வுகளின் சங்கமமே டைரி நிகழ்ச்சியின் தனித்துவம் - டைரி சகா
சலசலவென ஓசைக்கொட்டும் அருவிப்போல் பேசிச்செல்லும் பண்பலையாளர்களுக்கு மத்தியில் மெல்லிசைப்போல் பேசி, வார்த்தைகளால் வாழ்க்கையை உணர்த்திட முடியுமெனில் அக்குரலுக்கு ஓர் சத்தமில்லா ரசிக பட்டாளம் இருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே. "ஒரே குரல், ஒரே நிகழ்ச்சி, ஒரே நேரத்தில்" கடந்த 15 ஆண்டுகளாக காற்றலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது ஹலோ எஃப்எம் பண்பலையின் "டைரி" என்ற நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சி நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் சக்தி கொண்டது என்றால், அந்நிகழ்ச்சி நம் வாழ்வோடு இணைந்தது. ஒவ்வொரு மக்களின் வாழ்வோடு இந்நிகழ்ச்சியை கொண்டு சேர்த்ததில் மிகப்பெரிய பங்கு சகாவுக்கு உண்டு. டைரியின் பக்கங்களுடன் சகா என்ற இந்த வார்த்தை 15 ஆண்டு காலமாக இரவு நேரங்களில் திருச்சி மக்களுக்கு பிடித்த நம்பிக்கை வாக்கியம்.
15 ஆண்டுகால டைரி நிகச்சியில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் பக்கங்களை நமக்கு பகிர்ந்துள்ளார். இன்றைக்கு அவரது வாழ்க்கை குறித்தும் டைரி நிகழ்ச்சி குறித்தும் டைரியின் சகா பகிர்ந்து கொண்டவை. பள்ளியில் படிக்கும் போது பொதுமேடையில் ஒரு திருக்குறள் சொல்வதற்கு பயந்து திணறிய நான் இன்று ஆயிரக்கணக்கானோர் கூடிய சபையில் தன்னம்பிக்கையோடு அடுத்தவருக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசும் திறனை அளித்தது டைரி நிகழ்ச்சி தான்.
"ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்குவிப்பவனும் தேக்கு விப்பான்" கவிஞர் வாலியின் வரிகளை என் ஆசிரியர் எனக்கு எப்போதும் நினைவூட்டுவார். அவர் அளித்த ஊக்கம் இன்றைக்கு டைரி சகா என்ற தனி ஒரு அடையாளத்தையே எனக்கு ஏற்படுத்தியுள்ளது. குறுகிய நட்பு வட்டம், நடுத்தர குடும்பம். சாதாரண வாழ்வியல் என்று இருந்த என்னை ஊர் அறிய செய்தததோடு அளவில்லா உறவுகள், நண்பர்கள், பெரிய மனிதர்கள் பழக்கம் என்று எண்ணிலடங்காத விஷ்யங்களை தந்தது என் டைரி நிகழ்ச்சி தான். இதற்காக ஹலோ பண்பலைக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்வேன்.
பொதுவாக வரவு, செலவு கணக்கு நிகழ்ச்சிகளின் அட்டவணை பிறந்தநாள் மற்றும் முக்கிய நாட்களை நினைவில் கொள்வதற்கு டைரியை பயன்படுத்துவோம். ஆனால் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை, நிகழ்வுகளை, பழைய நினைவுகளை, எதிர்கால திட்டங்களை, நம் முன்னோர்கள் பதிவு செய்த காலங்கள் உண்டு. அதையே நிகழ்ச்சியின் விழுமியமாக எடுத்து தற்கால மனிதர்களின் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் காதல், அன்பு, துரோகம், வலி தோல்வி, வெற்றி, உற்சாகம் என்று உள்ளத்தின் அத்தனை உணர்வுகளையும் தாங்கும் பெட்டகமாக திகழ்கிறது "சகாவின் டைரி".
கடந்த பதினைந்து வருடங்களில் நான் பார்த்த மனித முகங்களும், கேட்ட அவர்களின் மன உணர்வுகளும் வழிந்தோடும் அன்பும், கொட்டித்தீர்த்த கண்ணீர் துளிகளும் என் டைரியின் பக்கங்களில் நீக்கமற நிறைந்துள்ளன. உணர்வுகளின் சங்கமம் தான் என் நிகழ்ச்சி. தனிப்பட்டவரின் வாழ்வியலை எண்ணத்தை எனக்கு கடிதமாகவோ, மின்னஞ்சலாகவோ அனுப்புவதை எடுத்து சுவாரசியமாகவும் கேட்கும் அடுத்த இதயத்துக்கு பயனுள்ளதாகவும் தொகுத்து வழங்கினோம். இதை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பார்க்காமல் மனதின் பழுதைத் தீர்க்கும் மருந்தாக அமையவேண்டும் என்பதே என் குறிக்கோள்.
வயது வித்தியாசம் இல்லாமல் பாலின வேறுபாடுகளை களைந்து தங்கள் ரகசியங்களை வாழ்க்கையின் நல்லது கெட்டது என்று அனைத்தையும் உற்ற நண்பன் போல நினைத்து என்னிடம் சொல்கிறார்கள். அடுத்தவரின் ஆன்மாவை சுமக்கும் குரலாக இருப்பது எவ்வளவு பேருக்கு கிடைக்கும். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பொறுப்புடனும் அக்கறையுடனும் பதினைந்து ஆண்டுகளாக செய்து வருவது பெருமை தான். ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சியில் சொல்லும் போது அதை கேட்கும் அடுத்தவரும் சொன்னவருக்காக பிரார்த்தனை செய்வதும், தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து தன்னம்பிக்கை அடைவதும், தவறு இருந்தால் திருத்திக்கொள்வது தான்.
கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, காதல் தோல்வி, விரக்தி, பயம், பலகீணம், தற்கொலை எண்ணம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கி டைரி நிகழ்ச்சி கேட்டபிறகு மனம் சற்று அமைதி கொண்டது என்பது தான் டைரியின் பலம். மலையில் புறப்படும் தண்ணீர் கடலை சேரும் முன் எத்தனையோ உயிர்களுக்கு பயன்படுவது போல என்னுடைய குரல் எத்தனையோ இதயங்களுக்கு நம்பிக்கை ஊற்றாகவும் அவர்களின் ரணங்களுக்கு
மருந்தாகவும் இருப்பதே வாழ்வின் உச்சமாக கருதுகிறேன். மனித உணர்வுகள் தாண்டி இயற்கையை, அறிவியலை, வரலாற்றை, சாதனையாளர்களை, எழுத்தாளர்களை, கலைஞர்களை, என் நிகழ்ச்சி பதிவு செய்துள்ளது. டைரி எனக்கு கிடைத்த வரம்' என்று அவர் முடித்த போது இன்னும் டைரியின் பக்கங்கள் நீளாதா என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியதில் வியப்பொன்றுமில்லை.
மக்களுக்கு வழிகாட்டியாக செயல்பட சகா எப்போதும் தவறியதில்லை. திருச்சியின் தூய்மை தூதுவராக மக்களின் குரலாய் ஒலித்தார். கல்வி, மருத்துவம் மற்றும் பேரிடர்களின் போது உதவிகள், மியவாக்கி காடுகளை ஊக்குவித்தல், உடல் உறுப்பு தானம் செய்தது என லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னோடியாக
இருந்துக்கொண்டிருக்கிறார். சகா தன் நிகழ்ச்சி மூலம் மக்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கை வரிகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு, பல ஆயிரம் பக்கங்களோடு "சகாவின் டைரி" தொடரட்டும் என்று “டியர் டைரி டேவில்" வாழ்த்துவோம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn