ஒரு நொடி கூட தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது - திருச்சியில் மின்சாரதுறை அமைச்சர் பேட்டி
திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சி வந்திருந்தனர். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்.... கையிருப்பில் இருக்கக்கூடிய நிலக்கரியை மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசு பிரித்து வழங்குகிறது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 43 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. தினசரி 50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தினசரி 60 ஆயிரம் டன் நிலக்கரியை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டின் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட். இதில் தேவைக்கும், உற்பத்திக்கும் 2500 மெகாவாட் இடைவெளி உள்ளது.
இதனால் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை 204 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மழைக்காலம் என்பதால் சேதமடையும் மின்கம்பங்களை புதுப்பிக்க ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழக மின் வாரியம் வாங்கிய கடனுக்கு 16,000 கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறது. எந்த நிலையிலும் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn