குடும்பத்தினரின் உதவியோடு பாரம்பரிய உணவை செய்து அசத்தி வரும் திருச்சி இல்லத்தரசி!!

குடும்பத்தினரின் உதவியோடு பாரம்பரிய உணவை செய்து அசத்தி வரும் திருச்சி இல்லத்தரசி!!

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுமார் 8 மாதங்களை கடந்து பயணித்து வருகிறோம். இந்த எட்டு மாதங்களில் ஒவ்வொருவரும் பல புது விதமான அனுபவங்களை கத்துக் கொண்டிருப்போம். சிலர் மாஸ்க் வியாபாரிகளாகவும், இன்னும் பலர் வேறு ஏதோ வேலைக்கும், இல்லத்தரசிகள் தங்கள் வீட்டில் செய்யும் கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை விற்று வருமானத்தை தேடி கொள்கின்றனர்.

Advertisement

அந்தவகையில் கடந்த மே மாதம் கொரோனா காலகட்டத்தில் திருச்சி இல்லத்தரசி ஒருவர் பண்டைய தானியமான கேழ்வரகு கம்பு, சோளம், திணை, வரகு ஆகியவற்றின் மூலம் உணவுகள் தயாரித்து திருச்சி முழுவதும் டெலிவரி செய்து வருகிறார்.

திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ சுரேஷ். இவர் நம் முன்னோர்களின் பண்டைய தானியமான கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை, குதிரைவாலி, ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் மாவு வகைகள் தின்பண்டங்கள் உள்ளிட்ட பாரம்பரிய உணவு பொருட்களை தாயாரித்து வருகின்றார்.

ஓ எம் ஜி புட்ஸ் (OMG Foods) என்ற பெயருடன் திருச்சியின் பல பகுதிகளில் தானே சென்று டெலிவரி செய்து வருகிறார்.

இதுகுறித்து ஜெயஸ்ரீ சுரேஷிடம் கூறுகையில்.... "இந்த கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு தான் இந்த ஓஎம்ஜி புட்ஸ். முழுவதும் ஹோம் மேட்டாக தான் தயாரித்து வருகிறோம். குழந்தைகளும் பள்ளி விடுமுறை என்பதால் என் கணவரின் உதவியோடு குடும்பமாக இணைந்து நம் உடலிற்கு ஆரோக்கியத்தையும் உறுதியையும் தரும் இந்த பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து வருகிறோம்.

எங்கள் வீட்டில் சிறுதானிய உணவு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வோம். அதன் மூலம் தான் தற்போது இயற்கையான முறையில் இந்த தயாரிப்புகளை செய்ய முன்னெடுத்துள்ளோம். நம் பாட்டியும், தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகள் தான் காரணம்.

Advertisement

தற்போது சிறுதானியங்களில் செய்யப்படும் அனைத்து வகையான உணவு பொருட்களும் செய்து வருகின்றேன். திருச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறுதானிய லட்டு, தினை லட்டு உள்ளிட்ட பொருள்கள் கிலோ 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றேன். திருச்சி பொறுத்தவரை மத்திய பேருந்து நிலையம், ராஜா காலனி, தில்லை நகர், உறையூர், குமரன் நகர், சத்திரம், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்து வருகின்றேன்.

டோர் டெலிவரி செய்யும் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் வாடிக்கையாளர்களிடம் சில்வர் கொடுத்துவிட்டு மீண்டும் அதனை அடுத்த முறை செல்லும் போது வாங்கி வருகிறேன். இதன் மூலம் நம் சுற்றுச் சூழலுக்கு என்னால் முடிந்த சிறிய உதவியாக இதனை செய்து வருகிறேன்" என்றார்

பாரம்பரிய உணவு வகைகளை கொரோனா காலகட்டத்தில், பாரம்பரியத்தையும், ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்கும் நோக்கத்தில் குடும்பத்தோடு சேர்ந்து இயற்கை உணவை தயாரிக்கும் இவர்கள் மற்ற குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர். 

 ஓஎம்ஜி புட்ஸ் உங்களுக்கும் வேண்டும் என்றால் 70102 66614 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO