திருச்சியின் “சைக்கிளிங் கிளப்”: சிறப்பு கட்டுரை:
சில வருடங்களுக்கு முன்புவரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்த மனிதர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள். பைக், காரெல்லாம் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட, சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது.
இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது. போதாக்குறைக்கு தற்போது பெட்ரோல், டீசல் விலையேற்றம் வேறு வதைக்க, பலர் சைக்கிளில் அலுவலகம் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
400 நாட்கள் 27 ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்த கரூர் சேர்ந்த தங்கவேல்.
கேரளா தமிழ்நாடு பெங்களூரு என சேர்ந்தவர்கள் 600 கிலோமீட்டர் கடந்து சாதனை.பிரபலமான தொழிலதிபர்கள் கூட தங்கள் நிறுவனங்களுக்கு சைக்கிளில் தான் சென்று வருகின்றன. என சைக்கிள் பற்றிய செய்திகள் ஒருபக்கம் வந்துகொண்டிருக்கும் காலநிலையில் திருச்சியிலும் இது போல் ஒரு அமைப்பு செயல்பட்டு எண்ணற்றவர்கள் பயன்பெற்று வருகின்றன.
ஐந்து, பத்து கிலோமீட்டர் தொடங்கி இப்போது 25 கிலோ மீட்டர் வரை சைக்கிளிங் செய்து வருகின்றனர் நம் திருச்சியை சேர்ந்த மக்கள். இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் எண்ணற்ற பயன்களை பெற்று வருகின்றன.இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் மற்றும் நீண்ட தூரப் பயணங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த குழுவின் முக்கிய நோக்கமாக ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் ஒரு பயிற்சியாக சைக்கிள் ஓட்டுதலின் விழிப்புணர்வையும் நன்மைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்பதே ஆகும். இந்த சைக்கிளிங் கிளப் ஒருங்கிணைப்பாளராக திருச்சி ஸ்ரீரங்கம் பிரசாந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
அவர் கூறுகையில்…“சைக்கிங் கிளப் என்பது பெரிய பெரிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது நம்முடைய திருச்சியிலும் இதுபோல் செயல்பட்டு வந்தால் மக்கள் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இந்த சைக்கிளிங் கிளப். சமீபத்தில்கூட திருச்சியை சேர்ந்த 22 இளைஞர்கள் 200 கிலோமீட்டர்கள் கடந்து சைக்கிளிலேயே சென்று புதுச்சேரியின் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனரே” என்றார்.
சைக்கிள் ஓட்டுவதால் எண்ணற்ற பலன்கள் நம்மை வந்தடைகின்றது.எனவே திருச்சி மக்களாகிய நாமும் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றால் இந்த சைக்கிளிங் கிளப்பில் இணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இதில் இணைய ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் (9618563379) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.