ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு திருச்சி மாணவன் உருக்கமான கடிதம்!

ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு திருச்சி மாணவன் உருக்கமான கடிதம்!

கொரோனா ஆரம்பமானது முதல் கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளிலேயே இருந்திருக்கலாமே என்று தோன செய்துவிட்டது இந்த ஆன்லைன் வகுப்புகள்! அதுவும் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களை சொல்லவே வேண்டாம்! அதுவும் தனியார் பள்ளிகள் என்றால் வாட்டி வதைத்து விடுவார்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று…

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஒரு மாணவன் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். அதைப் பற்றிய தொகுப்பு தான் இது.

நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் “ஆன்லைன்” வகுப்பினால் பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்படும் சூழல் உருவாகி வருவதால், “ஆன்லைன்” வகுப்புகளை உடனே தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, திருச்சி கல்லணை சாலையில் உள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த ‘துரை திரவியம்’ என்ற மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Advertisement

அதில் “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு, என் பெயர் துரை திரவியம், நான் ஒன்பதாம் வகுப்பலிருந்து 10 ஆம் வகுப்பிற்கு சென்றுள்ளேன். தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் The Indian Certificate of Secondary Education (ICSE) பள்ளியில் நான் படித்து வருகின்றேன்.
நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஆன்லைன் வகுப்பினால் தற்போது பிரச்சினை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் சவால்களை 
எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தங்களுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட பிரச்சினை அல்ல, எனது குடும்பத்தின் பிரச்சினையும் அல்ல, இது நம் நாடு முழுவதும் நிலவி வரும் மிகப்பெரிய பிரச்சினை.

இதில் துரை திரவியம் என்ற மாணவன் குறிப்பிடுகையில்…

குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் இணைய வேண்டுமானால், கணினி தொழில் நுட்பம் தெரிந்த ஒரு நபரோ (அல்லது) பெற்றோர்களோ அவர்களுடன் அருகில் இருக்க வேண்டும். குழந்தைகளின் அருகில் யாரும் இல்லாவிட்டால், குழந்தைகள் எதிர்பாராத விதமாக மின் விபத்துக்களில் சிக்கி கொள்ளும் ஆபத்து உண்டாகும். மேலும், தவறான மற்றும் மோசமான வலைத்தளப் பக்கங்களுக்கு அவர்கள் செல்லக்கூடும்.
ஆன்லைனில் வகுப்பில் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டால், அவர்களால் வேலைக்குச் செல்ல முடியா
து. கொரோனா வைரஸ் பரவும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் இது மிகப் பெரிய பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்து நீண்ட நேரம் பங்கேற்றால், குழந்தைகளுக்கு கண் பார்வையில் பிரச்சினை, மன அழுத்தம், மூளை சோர்வு ஆகியவை உண்டாகும். இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் வகுப்புகளில் இணைய வேண்டுமானால் கம்யூட்டர், லேப்டாப், டேப், ஆன்ராய்டு மொபைல் இவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் இருக்க வேண்டும். மேலும், இவை இணைய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியும். இந்த தொழிட் நுட்ப வசதிகள் எல்லா குடும்பத்திலும் நிச்சயம் இருக்காது.
ஒரு குடும்பத்தில் இரண்டு (அல்லது) அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் சூழல் இருந்தால், அனைவருக்கும் மேற்காணும் தனி, தனி கம்யூட்டர் மற்றும் இணைய வசதிகள் இருக்க வேண்டும். இது இந்தியாவில் சாத்தியமில்லை. ஏனென்றால், நம் இந்தியாவில் மின் வசதி இல்லாத கிராமங்களும், மின் இணைப்பே இல்லாத வீடுகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. மேலும், மின் இணைப்பு உள்ள வீடுகளில் (பகல் நேரங்களில்) அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்தியாவில் சில இடங்களில் இணைய வசதி இல்லை, அப்படியே இணைய வசதி இருந்தாலும் அது தொடர்ச்சியாக கிடைக்காது.


நாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டிய நம் மாணவர்கள், ஆபத்தான நோய் தொற்றுள்ள இந்த பேரிடர் காலத்தில், ஆன்லைன் வகுப்புகளால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது. எனவே, நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ஆன்லைன் வகுப்புகளை உடனே நிறுத்துவதற்கு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், ஆளுநர்களுக்கும் உத்தரவிடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement


கல்வி அவசியம்தான்; ஆனால், இந்த ஆபத்தான காலத்தில் உடல் ஆரோக்கியமும், உயிரும் அதைவிட முக்கியமானது”. எனவே, தயவு செய்து “ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்ப்போம்; மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்”.
தங்களின் நேர்மறையான பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
துரை திரவியம்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
.