ஆயுள் முடிந்த திருச்சி கோட்டை மேம்பாலம்! புதிய மேம்பாலம் கட்ட தாமதம் ஏன் -மாநகர மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கபடுமா?

ஆயுள் முடிந்த திருச்சி கோட்டை மேம்பாலம்! புதிய மேம்பாலம் கட்ட தாமதம் ஏன் -மாநகர மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கபடுமா?

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 41.16 மி.மீ என்கிற அளவில் மழை பதிவானது.நேற்று மழையின் காரணமாக மாநகரின் பல இடங்களில் மழை நீரால் சூழந்தது.இந்நிலையில் நேற்று மழையின் காரணமாக சாலை ரோட்டிலிருந்து மெயின் கார்ட் கேட் செல்லும் வழியில் உள்ள கோட்டை ரயில்வே மேம்பாலத்தின் ஓரத்தில் இன்று காலை மண் சரிந்தது.அதனால் அங்கு இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.இன்று ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அப்பகுதியில் செல்லாததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே மேம்பாலத்தை இடிக்குமாறு கடந்த ஆண்டும் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மீண்டும் சேலம் கோட்ட ரயில்வே திருச்சி மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1866 ஆம் ஆண்டு இந்தப் பாலமானது கட்டப்பட்டது. தற்போது அதன் உறுதி தன்மை குறைந்து விட்டதாகக் கூறியுள்ள சேலம் கோட்ட ரயில்வே, இந்த தடம் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றும், விரைவில் பணிகளைத் தொடங்க மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் பழமை வாய்ந்த மற்றும் திருச்சி மலைக்கோட்டை சாலையுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலமாக இருப்பதுதான் திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள கோட்டை ரயில்வே மேம்பாலம்…திருச்சியின் முக்கிய பகுதியில் அமைந்து இருக்கக் கூடிய இந்தப் பாலம் இடிந்து சேதம் அடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

Advertisement

ரயில்வே மேம்பாலம் என்பதால் ரயில்கள் செல்லும் பொழுது ஏற்படும் அதிர்வுகலாளும் பாலம் தினம் தினம் பலம் இழந்து வருகிறது. மாட்டுவண்டி பயணிக்க ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது கனரக வாகனங்கள் வரை பயணித்து வருவதால் மேலும் வலுவிழந்து வருகிறது. ஒருவேளை பாலம் இடிந்து விழுந்தால் இதில் பயணிக்கும் பயணிகள் பேராபத்தை சந்திக்கக் கூடிய சூழலும், பாலத்தின் கீழ் ரயில் செல்லும் பொழுது பாலம் இடிந்து விழுந்தால் எதிர்பாராத அளவிற்கு விபத்து ஏற்படும் சூழலும் உள்ள நிலையில் இன்னும் இந்தப் பாலம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

இப்படி ஆயுட் காலம் முடிந்து உறுதி தன்மை இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற சூழலில் உள்ள பாலத்தை மக்கள் பயன்பாட்டில் இருந்து தடை செய்யாமல், போக்குவரத்து மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.ரயில்வே மேம்பாலம் என்பதால் ரயில்வே துறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விரைந்து இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரக்கூடிய சூழலில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் ராணுவத்தின் இடம் கிடைக்காமல் பாதியிலேயே கிடப்பில் உள்ளது. இந்த சூழலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பலவீனமாக இருக்கக்கூடிய இந்த பாலம் எந்த நிலையிலும் இடிந்து விழலாம் என்ற அச்சுறுத்தலை நமக்கு ஏற்படுத்துகிறது.

மாநகராட்சி நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து விரைவில் இந்த பணியை தொடங்க வேண்டும் என்றும், இந்த பாலம் இடிந்து விபத்து மக்களுக்கு ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றும், இடிந்த பிறகு விபத்து நேர்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பது என்பது தேவையற்ற ஒன்று என்பதுமே மக்களின் கருத்தாக இருக்கிறது.

பழி வாங்க காத்திருக்கும் பழமை வாய்ந்த பாலம் இடிக்கப்படுமா புது பாலம் கட்டப்படுமா ?? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் திருச்சி மக்கள்.