தமிழகத்தின் 15 வயதிற்கு மேற்பட்ட கல்வி கல்லாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் திட்டம் - திருச்சியில் ஆலோசனை கூட்டம்!
தமிழக அரசு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்வி கல்லாதவருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில் "கற்போம் எழுதுவோம் இயக்கம்" என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில் புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து, திருச்சி நகர சரக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் தலைமையில் கூட்டம் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. புதிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும், திட்டத்தை விளக்கியும் திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் சிறப்புரை வழங்கினார்.
Advertisement
இத்திட்டத்தின் கீழ் வருகின்ற நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்கும் நோக்கில் மாவட்ட வாரியாக முதல்கட்ட வழிகாட்டுதல்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் அருள்தாஸ் நேவீஸ், இரா. ஜெயலட்சுமி அவர்கள் முன்னிலை வகித்து கருத்துகளை எடுத்துக்கூறினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சாந்தி அவர்கள் திட்டம் சார்ந்து தமது கருத்துகளை எடுத்து கூறினார். குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர் சியாமளா நன்றி கூறினார்.