ஊரடங்கில் வேலையிழந்த இளைஞர் - மாடு மேய்த்துக்கொண்டு யூடியூப் சேனல்!!
கொரோனா பலருடைய வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. சம்பள குறைப்பு, வேலை இழப்பு, பாசிட்டிவ், நெகட்டிவ் அன்றாட வாழ்க்கையை நகர்கிறது. கொரோனா ஊரடங்கால் பல இளைஞர்கள் வேலையிழந்து வீட்டில் தவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் சமூக வலைதளங்களில் அதிகமானோர் தங்களது நேரத்தை செலவிடுன்றனர். வீட்டில் இருந்து என்ன தான் செய்வது என தெரியாமல் சமூக வலைதளங்களை நம்பி சிலர் கால்பதிக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் வேலையிழந்து வீட்டில் மாடு மேய்த்துக் கொண்டுடே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த ஒரு இளைஞர்!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய கொட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் யாக்கோப் இருதயராஜ். இவர் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு 3 வருடமாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வீட்டில் இருந்து வரும் சூழ்நிலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டே தன்னுடைய திறமைகளையும் அரங்கேற்றி வருகிறார் இவர்.
இதுகுறித்து யாக்கோப் இருதயராஜிடம் பேசினோம்…. "வீட்டுக்கு வருமானம் வேணும் அதுக்காக வேலைக்கு போய் சம்பாதிக்க போனோன். இப்ப இந்த கொரோனா வந்ததுக்கப்புறம் என்னோட வேலையும் போயிடுச்சு. வேலை போனதற்கு அப்புறம் நான் அப்பப்போ கவிதையா எழுதிட்டு இருப்பேன். வேலை செய்யும்போதும் கூட கவிதை எழுதி வந்தேன். ஆனால் அதை எதையும் நான் வெளியிட்டதில்லை.
இப்போ இந்த கொரோனா காற்றில் பரவுகிறது என்கிறார்கள் அதுபோல என் கவிதைகளும் காற்றில் பறக்கட்டும் என்கின்ற எண்ணத்தில் பூட்டி வைத்த கவிதைகளை எல்லாம் வெளியிடுவோம் என்ற நோக்கத்தோடு யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தேன். வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் எங்களிடம் உள்ள நான்கு மாடுகளை தினமும் மேய்த்துக் கொண்டே கவிதைகளையும் எழுத ஆரம்பித்துள்ளேன்.நான் மட்டுமல்ல என்னைப் போல என்னுடைய நண்பர்களும் யூடியூப் சேனல் ஆரம்பித்து அவர்களுடைய திறமைகளையும் அதில் பதிவு செய்து வருகின்றனர். வேற வழி தெரியல, வேற வேலையும் கிடைக்கல.. சரி நமக்கு உள்ள திறமையை வெளி உலகத்திற்கு காட்டுவோம் என இந்த யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளேன். தற்போது இந்த இரண்டு வாரங்களாக ஐந்து வீடியோக்களை அதில் அப்லோடு செய்துள்ளேன். வருகின்ற நாட்களிலும் என்னுடைய கவிதைகளை எழுதி மக்களிடம் சென்று சேர்ப்பேன் என்கிறார் நம்பிக்கையுடன் யாகோப்.
இவர் அப்துல் கலாமுக்காக எழுதிய ஒரு சில வரிகள்
அயர்ந்த சிறகுகள்
அயர்ந்து தூங்க தான்
அக்னி சிறகு முளைத்ததோ
விட்டு பிரிய தான் விண்கலம் படைத்ததோ
மீன் பிடித்த கைகள்
விண்மீன் பிடிக்க போனதென்ன
கனவு காண சொன்னாயே
உன்னை கனவில் காண்பதற்கா
நீ கண்டு பலிக்காத ஒரே கனவு
இருபதில் வல்லரசு
வல்லரசு இப்போது வலுவிழந்து போனது
நல்லரசு நடத்த வழியில்லாமல் போனது
இனி ஒரு கலாம் பிறக்கட்டும்
மண்ணில் பிறக்க மறுபடி வாய்ப்பில்லை
மனதில் உதிக்க வாய்ப்புகள் ஏராளம்
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது
விதைத்தவர் விண்ணில் உறங்கட்டும்
விதைகள் வளர்ந்து விண்ணை எழுப்பட்டும்
மனத்தில் கலாம் விதைப்போம்
காலத்தை வெல்லும்
கலாம் படைப்போம்
வல்லரசு நிச்சயம் வலுப்பெறும்
சென்றவர் மீண்டதில்லை
வென்றவர் புகழ் மாண்டதில்லை
காலம் மாறும்
கலாம் மாறாது
அறிவியலுக்கே தன்னை
அர்ப்பணித்த துறவி கலாம்
தீவில் பிறந்த
நவீன தீர்க்கதரிசி கலாம்
புத்தன் யேசு காந்தி கலாம்
வறுமைக்காக சம்பாதிக்க போன இளைஞர்கள் அவர்களுடைய திறமைகளை பூட்டி வைத்து விடுகிறார்கள்.இந்த ஊரடங்கு ஒருபுறம் அவர்களை வேலை இழக்கச் செய்தாலும் மறுபுறம் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP