டோக்கன் முறை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

டோக்கன் முறை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு ஐந்து மாவட்டங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரிய மிளகுபாறை யில் உள்ள அரசு இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லூரியில் இந்த மருந்து விநியோகம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. 4-வது நாளான இன்றும் 500-க்கும் மேற்பட்டோர் ரெம்டெசிவர் மருந்து வாங்க காத்திருக்கின்றனர்.

இங்கு நாள் ஒன்றுக்கு 300 குப்பி மருந்து மட்டுமே வழங்கப்படுகிறது. முதல் 50 அல்லது 100 நபர்களுக்கு தான் மருந்து கிடைக்கிறது. ஆனால் மருந்து வாங்க பொதுமக்கள் நாள் முழுவதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லூரி முன்பு உள்ள கழிவுநீர் வடிகால் அருகே இரவு பகலாக காத்திருக்கும் மக்கள் சமூக இடைவேளை பின்பற்றபடுவதில்லை. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க நிலை உருவாகி உள்ளது.

இதுமட்டுமின்றி குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் காத்திருக்கும் மக்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் டோக்கன் முறையை கொண்டு வர வேண்டும். சாலையோரம் காத்திருக்கும் மக்களை கல்லூரி உள்ளே இருக்கும் மைதானத்தில் காத்திருக்க இட வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd