உலக ரேடியோ தினம்! அப்பவும் இப்பவும் எப்பவும் ஹீரோ ரேடியோ தான் !! இவர்கள் திருச்சி RJ’s ஹீரோக்கள்!!
பொதுவாக நம்முடைய அன்றாட வாழ்வில் நுகரும் ஊடகம் என்றால் அது ரேடியோ தான். சமைத்துக் கொண்டே தொலைக்காட்சி பார்க்க முடியாது.சாப்பிட்டுக்கொண்டே கிரிக்கெட் பார்ப்பதும் அவ்வளவு முழுமையாக இருக்காது. ஆனால் சமைத்துக் கொண்டேவும் சாப்பிட்டுக்கொண்டேவும் கேட்கக்கூடிய ஒரே ஊடகம் நம்முடைய ரேடியோ தான்!
யுனெஸ்கோ அமைப்பு வானொலி இவ்வுலகிற்கு ஆற்றிய பல்வேறு ஆற்றல்களை பெருமைப்படுத்தும் விதமாக 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி உலக ரேடியோ தினமாக அறிவித்தது.நாம் இப்போது பயன்படுத்தும் பல்வேறு தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு ரேடியோ தான் மூல காரணம் என்றால் அது மிகையாகாது.மார்க்கோனியின் மகத்தான படைப்புகளில் ஒன்றான இந்த ரேடியோ முதலாம் உலகப் போரை தொட்டு இன்று வரையில் பல்வேறு நிகழ்வுகளை நம்முடைய காதில் காற்றோடு கொண்டுவந்து சேர்க்கிறது.
காலை டீக்கடை தொடங்கி பயணம் செய்யும் பேருந்துகளிலும் வேலை செய்யும் அலுவலகங்கள் இடங்களிலும் இன்றளவும் ரேடியோக்களில் சாம்ராஜ்யம் தான். ரேடியோ என்னும் சாம்ராஜ்யத்தை கட்டிக்காக்கும் திருச்சி RJ’s அரசர்கள் பற்றிய தொகுப்புதான் இது!
RJ சஹா (ஹலோ FM)
இரவு நேரங்களில் இவருடைய குரலைக் கேட்காதவர்கள் திருச்சியில் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! பத்து வருடங்களுக்கு மேலாக பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளராக திருச்சியின் செல்ல நாயகனாக டைரி சஹாவாக வலம் வருகின்றவர்.
“முதல் முதலில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் என்னுடைய தமிழாசிரியை ஊக்குவித்தல் மூலம் இன்று இவ்விடத்தை அடைந்திருக்கிறேன்.இரவு நேரங்களில் சீரியல்களில் தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.உடம்பிலுள்ள எல்லா துவாரங்களையும் எப்படியாவது அடித்து விடலாம். ஆனால் காதுகளை மட்டும் கையை கொண்டு தான் அடைக்க முடியும். ஹெலன் கில்லர் கூறினார் காதுகளால் தான் வாழ்கின்றேன் என்பதுபோல செவிவழிச் செய்திகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. இன்றளவும் பார்த்தால் ரேடியோவை தனிமையிலும், காரில் பயணிக்கும் போதும், செல்போன்களிலும் கேட்கலாம். RJ ஆவதற்கு நல்ல குரல், தோற்றம், இடைவிடாமல் பேசுதல் என்பது தேவையில்லை.நன்றாக படித்தலும், எந்த ஒரு விஷயத்தையும் அதனுடைய வலி உணர்ந்து அதனை முழுமையாக செய்தாலே போதும். இறுதியாக ரேடியோ உங்களுடைய நண்பன்! என்கிறார் திருச்சியின் இரவுநேர இனிமை குரல் நண்பன்.
RJ சரவணன்(சூரியன் FM)
காலையில் திருச்சி மக்களுக்கு குட் மார்னிங் சொல்லி வணக்கம் திருச்சி என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான் இவருடைய தனி சிறப்பு!
“ரேடியோ கேட்பவர்கள் முன்பைவிட இப்போது குறைந்து கொண்டுதான் வருகிறார்கள் என்று சொல்லி வருகிறார்கள் ஆனால் அது உண்மையல்ல! முன்பை விட இப்போது தான் அதிக பேர் ரேடியோவை கேட்டு வருகின்றனர். அனைவருமே ஒருவர் பேசுவதை நாம் கேட்போம், அதையே விரும்புவோம் இன்னும் சுவாரசியமாக பேசினால் நம்முடைய கவலைகள் எல்லாம் மறந்து அதிலேயே கேட்டுக் கொண்டிருப்போம். உங்களுக்கு அனைத்து செய்திகளையும் அது அழுக வைக்கவும் சிரிக்க வைக்கவும் என அனைத்து விஷயங்களையும் சேர்ப்பதுதான் ரேடியோ!என்கிறார் திருச்சி சூரியன் FM சூப்பர் ஹீரோ.
காலையில் வணக்கம் திருச்சியில் தொடங்கி இரவு நேரங்களில் இனிமை குரலில் நம்மை தாலாட்டுவது வரை குரல்களால் நம்முடைய செவிகளுக்கு விருந்தளிக்கும் RJ’s களுக்கு இந்த நாள் சமர்ப்பணம். மேலும் தங்களுடைய இனிமை குரலோடு வெற்றி நடை போட TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்.