விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு? - நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆண்கள் விடுதி உள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த விடுதி மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப்படும் உணவு தரம் இல்லாமல் வழங்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்துள்ளது. இதனால் கொதித்து எழுந்த மாணவர்கள் உடனடியாக இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி மோகனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற மோகன் தலைமையிலான இந்திய மாணவர் சங்கத்தினர் விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விடுதி மாணவர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் பற்றி போலீசாரக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை போராட்டம் தொடரும் என கூறியதோடு சாலை மறியலை கைவிட்டு அங்கு உள்ள உருமு தனலட்சுமி கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision