கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்பது தவறான செய்தி என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திருச்சியில் பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வருகிற 2020 -2021 ஆண்டுக்கான வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்ட நிறைவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டம் தோறும் விவசாயிகளிடம் இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று திருச்சியில் கருத்து கேட்கப்பட்டது. விவசாயிகளிடம் தெரிவித்த குறைகளை அமைச்சர் குறித்து வைத்துள்ளார்.
அதனை முதல்வரிடம் கலந்து பேசி அவற்றை விவசாயிகளுக்கு செய்து கொடுக்க முடியும் என்பதை அறிவிப்பார். மேலும் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். மின்சார இணைப்புகள் அதிகமாக கொடுக்க வேண்டும் .விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்... கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என ஜி.கே. வாசன் குற்றம்சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு... நானும் கடைமடை பகுதியில் தான் இருக்கிறேன். மயிலாடுதுறை, சிதம்பரம் நாகை,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வந்துள்ளது .இது தவறான செய்தி என பதிலளித்தார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM