கொரோனா வைரஸ் தொடக்கம் முதல் முடிவு வரை! தத்துரூபமாக காட்சியை வெளிப்படுத்தி அசத்திவரும் திருச்சி ஓவியர்!!
கொரோனா வைரஸால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள காலத்தினால் அழியா நிகழ்வுகளை, 4 அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட ஓவியத்தின் மூலம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார் திருச்சியை சேர்ந்த ஓவியர் சித்தன் சிவா. இவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை காண்போம்!
திருச்சி அரியமங்கலம் பகுதியில் ஃபைன் ஆர்ட்ஸ் முடித்துவிட்டு ஓவியம் சார்ந்த வேலைகளை செய்து வருபவர் சித்தன் சிவா. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் முடங்கிய நிலையில், செயல்பட தொடங்கியது சித்தன் சிவாவின் ஓவிய தூரிகைகள்…
ஊரடங்கு காலத்தில் எல்லா தொழில்களும் முடங்கி இருந்த வேளையில், வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையிலும், தன்னுடைய ஓவிய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றார் சிவா.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து, வைரஸ் ஏற்படுத்திய உயிரிழப்பு, ஆய்வகங்களில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, பிற நாடுகளுக்கு பரவியது, அறிகுறிகளுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது,தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தனிமனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நிற்பது,வெளியில் வரும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வது,ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் வனவிலங்குகள் ஓய்வெடுப்பது, மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ், ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களின் கடவுளிடம் பிரார்த்திப்பது, பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த திருமணங்கள் எல்லாம் எளிய முறையில் நடைபெற்றது, விதிமுறைகளை மீறி மைதானங்களில் விளையாடியவர்களை காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் விரட்டியது,நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது,
தூய்மைப் பணியாளர்கள் அயராது தூய்மைப் பணியில் ஈடுபட்டது,சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவியது, பிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது, அரசின் விதிமுறைகளை மக்கள் பின்பற்றி நடந்தது மற்றும் பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மக்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கியது, அரசின் உத்தரவின் பேரில் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்கள் வீடுகளில் விளக்கேற்றியது, கைதட்டிப் பாராட்டியது,பத்திரிக்கையாளர்கள் செய்திகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்தது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய நான்கு அடி உயரமும் 10 அடி நீளமும் கொண்ட வரைபடத்தில் ஆயில் பெயிண்டிங் மூலம் காலத்தால் அழியாத வரலாற்றை தன் ஓவியத்தின் மூலம் பறைசாற்றி இருக்கிறார் ஓவியர் சித்தன் சிவா.
கொரோனா வைரஸ் மனித சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும், நெருக்கடிகளும், ஊரடங்கு உத்தரவும், விதிமுறைகளும் காலத்தால் பேசப்படக்கூடிய ஒன்று.
கொரோனா வைரஸ் சமுதாயத்தில் ஏற்படுத்திய நிகழ்வுகளை தன்னுடைய முயற்சியில் ஓவியமாக்க முயன்றதாக கூறும் சிவா, இந்த ஓவியத்தை கடந்த ஒன்றரை மாதங்களாக தயார் செய்து வருவதாகவும், ஆயில் பெயிண்டிங் மூலம் செய்யப்பட்ட இந்த ஓவியங்கள் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றும்,இன்னும் சில வேலைப்பாடுகள் முடிந்தவுடன் இந்த ஓவியத்தை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு கொடுத்து உதவ உள்ளதாகவும், தன்னால் இயன்ற சிறு உதவி என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார் சிவா.
உலக வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள, கொரோனா காலகட்ட நிகழ்வுகளை தன் ஓவியத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ள ஓவியர் சித்தன் சிவாவின் இத்தகைய முயற்சி வரலாறு பேசும் ஒன்று!