கிபி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த (யானை குத்தி பட்டான் கல்) நடுகல் - திருச்சியில் கண்டெடுப்பு!!

கிபி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த (யானை குத்தி பட்டான் கல்) நடுகல் - திருச்சியில் கண்டெடுப்பு!!

திருச்சி மாவட்டம் லால்குடி வாளாடி பகுதியில் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானை குத்தி பட்டான் கல் என சொல்லப்படும் இந்த கல்லில் திரிசூலம் நடுவிலும் இடது புறம் மனித உருவம் ஒன்றும், வலதுபுறம் யானையின் உருவம் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் சற்று சிதிலமடைந்து காணப்படும் இந்த நடுகல் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்கிறார் திருச்சி ஜோசப் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஆரோக்கிய தனராஜ்.

நடுகல் குறித்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வரும் இவர், இந்த கல்லினை இப்பகுதியில் கண்டெடுத்து இது குறித்த ஆய்வு செய்யும் பொழுது இது நடுக்கல் என்றும், யானை குத்தி பட்டான் கல் என்று அழைக்கப்படும் இக்கல், கிபி 12ஆம் நூற்றாண்டின் போது பெரம்பலூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் வேளாண் பொருட்களை தேடி இப்பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என்றும் அந்த யானையைக் கொன்ற வீரனுக்கு அல்லது யானையினால் கொல்லப்பட்ட வீரனுடைய நினைவாக இந்த நடுகல் நாட்டப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கிறார்.

யானை குத்தி பட்டான் கல் என்பது ஊருக்குள் நுழையும் யானையை வீரன் ஒருவன் கொன்றாலோ அல்லது வீரனை யானை கொன்றால் அதன் நினைவாக வைக்கப்படும் நடு கல்லாகும்.

Advertisement

தற்போது  வாளாடியில் கண்டெடுக்கப்பட்ட கல்லும் இவ்வகை கல்லாக  இருக்க கூடும் என்பதால் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார் பேராசிரியர் ஆரோக்கிய தனராஜ்.