முசிறியில் 2 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, புகையிலை பறிமுதல் - 3 பேர் கைது

முசிறியில் 2 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, புகையிலை பறிமுதல் - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், மோகன், காவலர்கள் பாலு, சுரேந்திரன், அருண், ராஜ், சுரேஷ், மலையரசன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஈபி ஆபீஸ் அருகில் உள்ள பெட்டிகடை ஒன்றில் சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை, கைப்பற்றப்பட்டது. கடை உரிமையாளர் மோகன் (45) என்பவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முசிறி அருகே உள்ள தும்பலம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (35 ), சிட்டிலரை கிராமத்தை சேர்ந்த முருகவேல் ( 42 ) ஆகியோரிடம் போதை பாக்கு புகையிலை கிடைப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் செல்வம் மற்றும் முருகவேல் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனை செய்வதற்காக தும்பலம் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு மற்றும் புகையிலை ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக செல்வம், முருகவேல் கைது செய்த போலீசார், போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வேன், பைக் ஆகியவையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW