2வது ஆடி வெள்ளி.. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்..!

2வது ஆடி வெள்ளி.. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்..!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2-ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். அதுவும் ஆடி வெள்ளி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது இந்த நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.

ஆடி 2வது வெள்ளிக் கிழமையான இன்று சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் தனித்தனி வாகனங்களிலும் பேருந்துகளிலும் சாரை சாரையாக வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

மேலும் மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும், துலாம் பாரம் நேர்த்திக்கடன் செலுத்தியும், அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். ஆடி மாதம் என்பதால் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூல், பானக்கம் பிரசாதமாக வழங்கபடுகிறது.

மேலும் அதிகாலையில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision