5 மாநகராட்சிக்கு ஐஏஎஸ் ஆணையர்கள் - திருச்சி மட்டும் தப்பியது எப்படி?
சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் , மதுரை கோவை நெல்லை சேலம் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் உட்பட 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித்சிங் கடலூர் கூடுதல் கலெக்டராக (வருவாய்) மாற்றப்பட்டார்.
ஈரோடு வணிக வரிகள் இணை ஆணையர் (மாநில வரிகள்) எஸ்.சரவணன், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், தஞ்சை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆர்.வைத்தியநாதன், தர்மபுரி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். தர்மபுரி சப்-கலெக்டர் எம்.பிரதாப் திருவண்ணாமலை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி சப்-கலெக்டர் சி.தினேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக இடமற்றம் செய்யப்பட்டார். மேட்டூர் சப்-கலெக்டர் வி.சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக (கூடுதல் கலெக்டர், மேம்பாடு) நியமிக்கப்பட்டார்.
திண்டிவனம் சப்-கலெக்டர் எஸ்.அனு, பொதுத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டார். குளித்தலை சப்-கலெக்டர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், சேலம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதிக் தயாள், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். விருதாச்சலம் சப்-கலெக்டர் கே.ஜே.பிரவீன் குமார், ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் சப்-கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, தஞ்சை கூடுதல் கலெக்டராக (வருவாய்) மாற்றப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை சப்-கலெக்டர் கே.இளம்பகவத், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலொன், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக (தெற்கு) மாற்றப்பட்டு உள்ளார். திருப்பூர் சப்-கலெக்டர் வந்தனா கார்க், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெரம்பலூர் சப்-கலெக்டர் ஜே.இ.பத்மஜா, சேலம் சாகோசெர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராாக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனர் கே.பி.கார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத்துறை துணைச் செயலாளர் டி.கிறிஸ்துராஜ், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் செயல் அதிகாரி கிராந்தி குமார் பதி, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அதிகாரி பி.விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (தெற்கு) ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி ஆணையரானார்.
நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) மற்றும் ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரி எம்.எஸ்.பிரசாந்த், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (பணிகள்) மாற்றப்பட்டார். சென்னை வணிக வரிகள் இணை ஆணையர் (அமலாக்கம்) நாரணவரே மனிஷ் சங்கர்ராவ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) மாற்றப்பட்டார்.
பெரியகுளம் சப்-கலெக்டர் டி.சினேகா, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பட்டியலில் திருச்சி மாநகரம் இடம்பெறாதது திருச்சி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் அடுத்து மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 615 கோடி ரூபாய் . இது தமிழக மாநகராட்சிகளின் வரி வருவாய் மூன்றாவது இடத்தை கொண்டுள்ளது.
ஆனால்கடந்த 10 ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சிக்கு என்று எந்தவித சிறப்பு செயல்திட்டங்களும் நடைமுறைப்படுத்துவதில்லை அதுமட்டுமின்றி புதிதாய் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் திருச்சி போன்ற வளர்ந்துவரும் நகரங்களுக்கு கொடுக்கப்படவில்லை.
திருச்சி மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டங்களும் விரைவாக முடிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லாமல் அனைத்து திட்டங்களும் மெத்தனப்போக்காய் நடைபெறுகிறது.
திருச்சியிலிருந்து இரண்டு அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் திருச்சி மாநகராட்சி புறக்கணிக்கப்படுவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமைச்சர்களின் பார்வைக்கு இதனை கொண்டு சென்று அவர்கள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எண்ணமாக உள்ளது .