படித்திருந்தும் வேலையில்லை - 5 வருடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதி வாழ்வை நகர்த்தும் மாற்றுத்திறனாளி!

படித்திருந்தும் வேலையில்லை - 5 வருடமாக மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதி வாழ்வை நகர்த்தும் மாற்றுத்திறனாளி!

கொரோனா ஊரடங்கால் உருக்குலைந்து போயுள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதும் மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை! படித்திருந்தும் மாற்றுத்திறனாளி என்பதால் வேலை கிடைப்பதில்லை என வேதனையில் கண்ணீர் வடிக்கிறார் 35 வயது இளைஞர் சிவகுமார்!

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மனுக்கள் தான்! மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் தேவைகள், பகுதிகளின் தேவைகள், வேலைவாய்ப்பு, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இலவச வீடு, சாலை வசதி, மின் விளக்கு வசதி என எல்லாவற்றுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் குவியும் மக்கள் ஏராளம்.

எல்லா திங்கட் கிழமைகளிலும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொழுது, தங்கள் பகுதிகளின் தேவைகளையும், தங்களுக்கான தேவைகளையும் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். அவர்களின் கோரிக்கையை மனுக்களாக எழுதி உரிய ஆவணங்களை இணைக்க சொல்லி வழிகாட்டும் விதத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மனு எழுதுபவர்கள் இருப்பார்கள்.

மனு எழுதுவதால் கிடைக்கும் ஐம்பது, நூறு ரூபாய் வைத்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களின் நிலையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தாக்கம்.

Advertisement

கொரோனா பொது முடக்கத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டம் தற்போது நடைபெறுவதில்லை.மனு எழுத தற்போது அதிக அளவில் மக்கள் வராததால் இதனை நம்பியுள்ள மனு எழுதுபவர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

திருச்சி அரியாவூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிவகுமார்(35). இவர் அக்கவுண்டன்ட், டேலி படித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடமாக மனு எழுதும் வேலை செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தில் உள்ள தாய் அஞ்சலை (58), பாட்டி செங்கமலம் (85) இருவரையும் இதில் வரும் வருமானத்தை கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது கொரோனா காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுத அதிகளவில் மக்கள் வராததாலும், ஆன்லைன் மூலம் மனு எழுதும் முறை வந்துள்ளதால் ஒரு நாளைக்கு 400 ரூபாய் வரை கிடைத்த தங்களுக்கு, தற்போது 100 ரூபாய் கூட கிடைப்பதில்லை என்கிறார் மாற்றுத்திறனாளி சிவகுமார்.

அரசு கொடுத்த இருசக்கர வாகனம் உதவி வந்ததாக கூறும் சிவகுமார், வருமானம் இல்லாததால் வாகனத்தின் கிழிந்த சீட்டை கூட மாற்ற வழியின்றி தவிப்பதாக கூறுகிறார்.

தான் அக்கவுண்டென்ட், டேலி படிதுள்ளதாகவும், ஆனால் மாற்றுத்திறனாளி என்பதால் எங்கு சென்றாலும் எனக்கு வேலை கொடுப்பதில்லை என்றும் கண்ணீர் வடிக்கிறார் சிவகுமார்.

 கால்களில் அணிய வேண்டிய காலணிகளை கைகளில் மாட்டிக்கொண்டு மனு எழுதுவதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இருந்து தவழ்ந்து வரும் இவரைக் காணும் போது நமக்கே கண்கள் கலங்குகிறது. 

ஒருபக்கம் கொரானா தங்களுடைய வாழ்வாதாரத்தை முடக்கிய நிலையில்,அரியாவூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டிய நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் சிவகுமார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், தாங்கள் வாழ்வதற்கு வழியாக அமையும் என கண் கலங்குகிறார் சிவகுமார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பலதரப்பட்ட மக்களின் குறை நீக்க மனு எழுதி தரும் மாற்றுதிறனாளி சிவகுமாரின் குறை தீர்க்க என்ன மனு எழுதுவதோ?