திருச்சியில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பேருந்து

திருச்சியில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பேருந்து

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 42 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து திருச்சி மாவட்டம் யாகபுரம் ஒத்தக்கடை என்னும் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள சுமார் 30 அடி பள்ளத்தில் இறங்கியது. 

பள்ளத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதிய நிலையில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் பேருந்து தீப்பற்றியது. உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலைத் தொடர்ந்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 12க்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பேருந்தின் ஓட்டுனர் உட்பட 12 பேர் காயமடைந்த நிலையில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். மற்றவர்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision