திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்..... திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும்; கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, செயல்பாடற்ற விடியா திமுக ஆட்சியில், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தாலும்; அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழக அரசால் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முறையாகப் பராமரிக்காத காரணத்தாலும், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், விடியா திமுக ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கும், சாலையில் செல்வதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும், சாலைகளில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும், இங்கு ஏற்படக்கூடிய காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறு மற்றும் சருமப் பிரச்சனைக்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை விடியா திமுக அரசின் உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, மக்கள் நலன் கருதி திருச்சி மாநகராட்சியில் "Smart City" அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், பல இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களுடன் கூடிய சாலையோர பூங்காக்கள், கைப்பிடிகளுடன் கூடிய நடை மேடைகள், பல சமூக நலத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆனால், விடியா திமுக அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருவதால், கள்ளத் தெரு, ராணி தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, சந்துகடை, சமஸ்பிரான் தெரு, முத்தழகு பிள்ளை தெரு, கொத்தமங்கலம், பிராட்டியூர், பீரங்கி குளத் தெரு, அல்லிமால் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களிடையே டெங்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருவதோடு, 60-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் மரணமடைந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர். குடிநீர் பராமரிப்புப் பணி, குப்பை சேகரிப்பு பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தனிப்பட்ட லாபங்களுக்காக தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. கழக ஆட்சிக் காலத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகி வருகிறது. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும்; கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் விடியா திமுக அரசைக் கண்டித்தும்; பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்டபல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், (20.8.2024) செவ்வாய் கிழமை - காலை 10:30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன் தலைமையிலும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான J. சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாநகர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision