பயிற்சி முடித்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆசிரியர் தேர்விற்கான பயிற்சி பெறுபவர்கள் கோரிக்கை
முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பயிற்சி பெற்று வருபவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அதில் இளங்கலை ஆசிரியர்களுக்கு TET என்கிற தேர்வும், முதுநிலை ஆசிரியர்களுக்கு PG TRB என்கிற தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத 40 வயது என்கிற வயது வரம்பை கடந்த அ.தி.மு.க அரசு நிர்ணயித்தது. இதனால் தேர்வுவெழுத பயிற்சி பெற்று வந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பு ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி அடைந்தவர்களின் தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்கிற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத அ.தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்ட வயது வரம்பு இதுவரை நீக்கப்படவில்லை.
சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்ப்பார்த்தோம் ஆனால் எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது எங்களுக்கு கவலையை தருகிறது. தேர்தலுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுத இருக்கும் வயது வரம்பு தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் ரத்து செய்யப்படும் என தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அவர் கூறியதை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
இருந்த போதும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்து வெளியேறுகின்றனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1000 முதல் 2000 பேருக்கு தான் பணி நியமனம் வழங்கப்படுகிறது. எனவே பயிற்சி முடித்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn