விவசாயிகளிடம் மண்டியிட்டு கோரிக்கைகளை ஏற்ற வேளாண் அலுவலர் - திருச்சி அருகே நெகிழ்ச்சி சம்பவம்!!

விவசாயிகளிடம் மண்டியிட்டு கோரிக்கைகளை ஏற்ற வேளாண் அலுவலர் - திருச்சி அருகே நெகிழ்ச்சி சம்பவம்!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட மூன்று ஒன்றியப் பகுதிகளில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, கரடிபட்டி, கருமலை, எண்டப்புளி, வையம்பட்டி, கரையாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொன்னி உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர், நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

Advertisement

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. வயல்களில் தண்ணீர் வடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement

இதுமட்டுமின்றி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பருத்தி பயிர்களும் நீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சனிக்கிழமை துவரங்குறிச்சி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கே.சி.பழனிச்சாமி தலைமையில் அழகிய பயிர்களை சாலையில் போட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், நத்தம் - துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்டா பகுதிகளில் மழையினால் சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய மூன்று ஒன்றிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அதிகாரிகள் முன்வரவில்லை. எனவே, வேளாண் உயர் அதிகாரிகள் நஷ்டஈடு குறித்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மருங்காபுரி வட்டத்தின் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை மறியலை கைவிடக்கோரி வலியுறுத்தியும் விவசாயிகள் ஏற்கவில்லை. இதனையடுத்து, நிகழ்விடம் வந்த மருங்காபுரி வேளாண் அலுவலர் நிரஞ்சன், விவசாயிகள் முன்பு மண்டியிட்டு உங்களது கோரிக்கைகள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பதாகவும், வரும் திங்களன்று பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு தொடங்கப்படும் என கை கூப்பியபடி உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் நெகிழ்ச்சியாகி சாலை மறியலை கைவிட்டனர். பின்னர், தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை வருவாய்த்துறை அலுவலர்களுடன் சென்று வேளாண் அலுவலர் நிரஞ்சன் பார்வையிட்டார். இதற்கிடையே, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மண்டியிட்டு வேளாண் அலுவலர் நிரஞ்சன் பேசியது விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மண்டியிட்டு கோரிக்கைகளை ஏற்ற மருங்காபுரி வேளாண் அலுவலர் நிரஞ்சனை பார்த்து நெகிழ்ந்தனர்.