திருச்சியில் குழந்தைகள் தின விழா சிறப்பு கொண்டாட்டம்:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் புத்தாடை வழங்கும் விழா , குழந்தைகள் தின விழா, பாரத சாரண இயக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்டக் காவல் துணை ஆணையர் திரு .ஆ . மயில்வாகனன் IPS கலந்து கொண்டு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் விளையாட்டுப் பொருட்களை இலவசமாக வழங்கினார். கேரம் போர்டு, சதுரங்கப் பலகை, கால் பந்துகள், கைப்பந்துகள், உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
மயில்வாகனன் அவர்களின் சிறப்புரையில் “சிறார் பருவம் நம் வாழ்வில் சிறப்பான பருவம்.இந்த வயதில் மனதில் எதை விதைக்கின்றோமோ எதிர்காலத்தில் அதுவாகவே உருவாகுவோம். விளையாட்டு உடல் நலம் மன நலம் ஆளுமையை வளர்க்கும் , சந்தோசத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் எதற்காகவும் சந்தோசத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் .நன்றாக படித்து சமூகத்தில் சிறந்த மனிதராக உயர வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதினை வழங்கினார். மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஷ், மணப்பாறை கல்வி மாவட்ட சாரண செயலர் மில்டன், கலைக் காவேரி பேராசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தி – சாரண ஆசிரியர் புஷ்பலதா ஆகியோர் செய்திருந்தினர்.