சமுதாய வளைகாப்பு விழா -அமைச்சர் பங்கேற்பு

சமுதாய வளைகாப்பு விழா -அமைச்சர் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்   தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  இன்று (23.02.2025) கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், வேப்பம் காப்பு, மாலை மற்றும் கர்ப்பகாலம் குறித்த துண்டு பிரசங்களை வழங்கி வாழ்த்தினார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இன்று (23.02.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உறையூர் வட்டாரத்தின் சார்பாக 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அவர்களது வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்ல ஊட்டச்சத்துடன் பெற்றெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறார்கள். குழந்தையின் முக்கியத்துவத்தினை அனைத்து கர்ப்பிணி பெண்களும் உணர்ந்து ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொண்டு ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுக்க வேண்டும். இக்குழந்தைகளே நாளைய சமுதாயத்தினை உருவாக்குபவர்கள். எனவே, இவர்களை கருவிலிருக்கும் பொழுதே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொண்டு குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு அன்புடன் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கும் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் மங்கலப் பொருட்களான வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், வேப்பம் காப்பு, மாலை மற்றும் கர்ப்பகாலம் குறித்த துண்டு பிரசங்கம் வழங்கப்பட்டது. பின்பு அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 5 வகையான கலவை சாதம் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரிணி, மாவட்ட திட்ட அலுவலர் மா.நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision