கொரோனா விடுமுறையில் நாட்டு சிலம்பப் பயிற்சி - திருவிழாவாக நடத்திய கிராம மக்கள்!

கொரோனா விடுமுறையில் நாட்டு சிலம்பப் பயிற்சி - திருவிழாவாக நடத்திய கிராம மக்கள்!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களுக்கு ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் 7 மாதங்களாக வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் எப்போதுடா பள்ளிகள் திறப்பார்கள் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர். இந்நிலையில் ஒரு கிராமத்தில் விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக நாட்டு சிலம்பத்தினை கற்றுக் கொடுத்து அசத்துகிறார் சிலம்ப ஆசிரியர் ஒருவர். அதனை அக்கிராமத்தில் சிலம்ப திருவிழா தற்போது நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதைப்பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது.

Advertisement

தமிழனின் பாரம்பரியமிக்க தற்காப்பு கலைகளில் ஒன்றானது சிலம்பம். அதனை இந்த கொரோனா விடுமுறை நாட்களில் சுமார் 35 பேருக்கு பயனுள்ள வகையில் கற்றுக் கொடுத்துள்ளார் புதுக்கோட்டை கீரனூரை சேர்ந்த சின்னராசு எனும் சிலம்ப ஆசிரியர். அக்கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்த பயிற்சியினை பெற்று வந்துள்ளனர். கற்றுக்கொடுத்த கலையினை அரங்கேற்றும் விதமாக நாட்டு சிலம்பத்தினை திருவிழாவாக அரங்கேற்றி அழகு பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த உலகத்தான் பட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கற்றுகொண்ட சிலம்ப கலையை அரங்கேற்றினர்... இதில் 3வது படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் வரை சிறப்பாக சிலம்பம் விளையாடினார்கள்.

Advertisement

இதுகுறித்து சிலம்ப ஆசிரியர் சின்னராசுவை தொடர்பு கொண்டு பேசினோம்... கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாததால் எங்கள் ஊரில் உள்ள சுமார் 35 மாணவ மாணவியருக்கு சிலம்பம் பயிற்சியினை தொடங்கினோம். என்னுடைய அப்பா எனக்கு நாட்டு சிலம்பம் கற்றுக் கொடுத்தார். எனக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஆனாலும் நாட்டு சிலம்பத்தின் மீது உள்ள ஆர்வத்தால் நம்முடைய மாணவமணிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த விடுமுறை நாட்களை அவர்களுக்கு செலவழித்தோம். அதன்படி கடந்த 5 மாதங்களாக சிலம்ப பயிற்சி பெற்ற மாணவர்கள் இறுதியாக நேற்று திருவிழாவாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த தாங்கள் பிள்ளைகளின் சிலம்பத்தை அரங்கேற்றினர். எங்கள் ஊரான உலக்கத்தான் பட்டியில் 35 மாணவ மாணவிகள் சிலம்பம் பயிற்சி பெற்று அக்கிராம மக்களுக்கும், பெற்றோர்களுக்கும் முன்னதாக தாங்கள் பெற்ற பயிற்சியினை அரங்கேற்றியது அவர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது" என்றார் மகிழ்வுடன் சின்னராசு

தற்காப்பு கலைகளையும் வயதினை தாண்டி கற்றுக் கொடுத்த ஆசான் சின்னராசுவும் கொரோனா காலகட்டத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.