கொரோனா நெகிழ்ச்சி! தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக பயன்படுத்திய திருச்சி ஆசிரியர்!!

கொரோனா நெகிழ்ச்சி! தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக பயன்படுத்திய திருச்சி ஆசிரியர்!!

"அந்த மனசு தான் சார் கடவுள்" என்னும் அன்பே சிவம் திரைப்படத்தின் வசனம் போல கொரோனா வைரஸை தடுப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு உள்ளங்கள் பல உதவிகள் செய்துதான் வருகின்றன.பசியால் பட்டினியால் அன்றாட வாழ்க்கை கூட நடத்த முடியாத சூழ்நிலையில் இன்றளவும் இச்சமுதாயத்தில் பலர் தவித்து தான் வருகின்றன.

இதில் வேலை இழப்பு, சம்பளம் இன்மை என பல காரணங்களால் பலர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் முண்டாசு கவி பாரதி! இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உணவு வழங்கி வரும் அமைப்புகளும் தனி நபர்களும் பாராட்டுக்குரியவர்கள். அந்த வகையில் திருச்சியில் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக பயன்படுத்திய ஆசிரியர் பற்றிய நெகிழ்ச்சி தொகுப்பு தான் இது!

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சதீஷ்குமார். ஏற்கனவே தன்னுடைய பள்ளி மாணவிகளுக்காக சமூகவலைதளங்களில் நிதி திரட்டி நவீன கழிவறை கட்டி கொடுத்து அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் இவர்!

Advertisement

இந்த ஊரடங்கு கொரோனா காலகட்டத்திலும் 296 குடும்பங்களுக்கு 2 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் நிவாரண பொருட்களை வழங்கி வந்துள்ளார். இதில் தன்னுடைய ஒரு மாத சம்பளம் 46000 ரூபாயையும், மீதி பணத்தை சமூக ஊடக நண்பர்கள் மூலமாக நிதி திரட்டி ஒரு குடும்பத்திற்கு 1000 என நிவாரண பொருட்களை வழங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து சதீஷ் குமாரிடம் பேசினோம்… கொரோனா அக்காலகட்டத்தில் தன்னுடைய பள்ளி மாணவர்கள் உதவி கோரினார்கள். முதல் கட்டமாக அவர்களுடைய குடும்பங்களை நேரில் சந்தித்தும் சாலையோரம் வசிப்பவர்கள், வீடற்றவர்கள் என அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம். மேலும் அடுத்த கட்டமாக 30 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்க தயாராக உள்ளோம். இதற்கு தேவையான நிதியினை சமூக ஊடக நண்பர்கள் மூலமாக திரட்டி வருகின்றேன்.கடந்த ஒரு மாத காலமாக இப்பணியை செய்வதன்மூலம் இனம் புரியா ஒரு சந்தோசத்தை பெற்று வருகிறேன்.என்றார்.

"மேன்மக்கள் மேன்மக்களே" என்பதுபோல மீண்டும் திருச்சி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் என்பதில் ஐயமில்லை! சதீஷ் குமார் அவர்களுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.