நாள் ஒன்று - திருச்சியில் கமல் - என்ன நடந்தது?

நாள் ஒன்று - திருச்சியில் கமல் - என்ன நடந்தது?

திருச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநிமிரட்டும் தமிழகம் என்ற பெயரில், தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக இன்று சென்னையிலிருந்து மதுரை சென்றுள்ளார்‌. தொடர்ந்து தற்போது திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்கினர்.

அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான கார்களுடன் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு திருச்சி காஜாமலையில் உள்ள (எஸ்.ஆர்.எம்) ஹோட்டலில் ம.நீ.ம தலைவர் கமலஹாசன் தங்கியுள்ளார். ஹோட்டலுக்குள் அவர் நுழைந்தபோது , அவரது ரசிகர்களும் கூட்டமாக உற்சாகத்துடன் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றனர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஹோட்டலின் நுழைவு பகுதியில் உள்ள முன்பக்க கண்ணாடி கதவு ஒன்று உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

பின்பு மத்திய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் பொது மக்களை சந்தித்து விட்டு, பின், தனியார் ஓட்டலில் நடைபெற்ற பிரச்சார அரங்கில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்..."நீங்கள் முழு நேர அரசியல்வாதியா என்ற கேள்விக்கு பெரியார் சொன்ன பதில் தான் முழுமையாக யாரும் எதுவும் கிழிப்பதில்லை என்று கூறினார் அதுதான் என்னுடைய பதிலும், என்னோடு வந்து நீங்கள் அனைவரும் அரசியலில் குதிக்க வேண்டுமென்றும் அனைத்தையும் விட்டு விட்டு என் பின்னால் வாருங்கள் என்பது மக்கள் நீதி மையத்தின் கொள்கை அல்ல 

எதோ ஒரு வகையிலான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய கொள்கை. எனவேதான் இந்த அரசின் நான் கொள்ளையர்களை முன்வைப்பதில்லை அவர்கள் செய்யும் தொழிலைத் தான் நான் கூறுகிறேன். இதே அரசு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு என்னை துரத்திக் கொண்டு வந்து நடுத்தெருவில் நிறுத்துவதற்கு திட்டம் போட்டது. எனக்கு அன்று உதவியது இந்த திருச்சியில் இருந்த என்னுடைய வீடுதான்.

எனவே நீங்கள் தமிழகத்தை சீரமைக்க புறப்படுங்கள். நானும் புறப்படுகிறேன். அரசின் செயல்பாடுகளையும், திருட்டுதனத்தையும் ஓடி ஒளித்து மறைக்க முடியாது அனைத்தும் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. தட்டுகிற கரங்கள் எல்லாம் முத்திரை வார்க்கும் கரங்களாக மாற வேண்டும் அதற்கான நினைவுறுத்தல் தான் எங்களுடைய பரப்புரை.

ஒவ்வொரு தொழிலும் 30 சதவீத வளர்ச்சி கொடுக்கப்படும். அரசு, அரசு என்று பேசுவது நான் உங்களுடன் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு செல்ல வரவில்லை நாங்கள் இதை செய்வோம் என்ற நம்பிக்கையில் கூறினேன். மக்கள் நீதி மையம் கைகளுக்குள் எப்படி இணைந்து இருக்கிறதோ அதேபோல் உங்களுடைய கைகளும் இணைந்திருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை உங்களுடைய கைகளைக் கோர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறோம் நல்ல அரசை கொடுப்பதற்காக நாங்கள் இருக்கிறோம் நான் தருகிறேன். இந்த பரப்புரையில் இரண்டு நோய்கள் தாக்காமல் இருக்க கவனம் செலுத்தியுள்ளோம்.  

Advertisement

இரண்டுமே கொள்ளை நோய்கள் தான் ஏனென்றால் இது ஒரு குருட்டு வியாதி எல்லோருக்கும் வரும். அதிலும் இந்த அரசின் பிணைந்து உள்ள ஊழல் என்ற நோய் நல்லவர்களை மட்டுமே தாக்கும். தமிழ்நாட்டை ஒன் ட்ரில்லியன் எகனாமியாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம். அவ்வாறு மாற்ற தேவைப்படுவது நேர்மையான அரசு‌" என‌ கூறினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை பகுதிக்கு சென்றார். அங்கு பேசிய போது... "மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். அமைச்சர்கள் சேர்த்த கூட்டம் காசு குடுத்து சேர்த்த கூட்டம். ஆனால் இங்கு கூடியிருக்கின்ற கூட்டம் நேர்மையாக தானாக சேர்ந்த கூட்டம். நான் ஒன்றும் சினிமா நட்சத்திரம் அல்ல நான் உங்கள் வீட்டில் வைத்து கொள்ள வேண்டிய சிறிய விளக்கு. இந்த விளக்கு உங்கள் வீட்டிற்கும் வெளிச்சைதையும் மாற்றத்தையும் தரும்" என்றார்

பின்பு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு சென்று பொதுமக்களிடம் பேசுகையில்... "55 சதவீதம் பெண்கள் இருப்பதால்தான் தற்போது இவ்வளவு பெண்கள் வந்துள்ளனர். மக்கள் நீதி மையம் கட்சி மாற்றத்திற்கான கட்சி அனைவரும் இணைந்து இருப்போம்" என்றார்

இறுதியாக மக்கள் நீதி மையம் கமலஹாசன் சமயபுரம் டோல்கேட்டில் பேசுகையில்.... "நேர்மையானவர்கள் கூட்டத்தில் பேசுவதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழகம் ஒரு புரட்சிக்கு தயாராகி விட்டது. அதற்கு இந்த அடையாளமும் இங்கே தெரிகிறது இதற்காக அரை நூற்றாண்டு காத்திருக்கிறோம். 

இந்த தலைமுறைக்கு நல்லது ஏற்பட வேண்டும் எங்கு சென்றாலும் மகளிர் கூட்டம் இருப்பது பெரும் நம்பிக்கை இருக்கிறது, பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்ற முடியும். முகக்கவசம் இல்லாமல் தாய்மார்கள் குழந்தையை கூட்டத்திற்கு கூட்டி வர வேண்டாம் என அறிவுரை செய்தார். கொரோனா காலத்தில் எதற்காக கூட்டத்தில் போகிறீர்கள் என்று சொன்னார்கள், நான் கூட்டத்திற்கு நடுவில் போகவில்லை குடும்பத்திற்கு நடுவே போகின்றேன். தமிழகத்தை சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது மாற்றத்திற்கான விதையை நீங்கள்தான் தூவவேண்டும். அதற்கான தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்றார்.

இவ்வாறாக இன்றைய ஒரு நாள் தேர்தல் பிரச்சார பயணத்தை திருச்சியில் நிறைவு செய்து விடுதிக்கு திரும்பினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO