தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தகவல்

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தகவல்.திருச்சி மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 100 ஏக்கர் பரப்பில் தொட்டியம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தர்பூசணி டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச்,
ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் இப்பழம், கடந்த சில தினங்களாக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் தர்பூசணி பழங்களில் கலப்படம்
செய்யப்படுவதாக பரவிய, உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் முதலிய உயர் அதிகாரிகள் மாவட்ட அளவிலான தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாய்வில் பழங்களை பறித்து உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை இரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும், நம் உடலின் நீர்ச்சத்தின்மையை போக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும்
வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணூட்ட சத்துக்களும் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டும் ஒரு உன்னத பழமாகும். தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாகவே லைகோபீன்
எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதன் காரணமாகவே சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும், மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரபி காரணம் ஆகும். இதை கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு. குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் காணலாம். இந்த லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நமது கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண்புரை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
இத்தகைய சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை கலப்படம் செய்யப்படுவதாக ஊடகத்தில் பரப்பிய தவறான வதந்திகளை நம்பாமல் பொதுமக்கள் அனைவரும் உண்டு பயனடையும்படி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision