திருச்சியில் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துவக்க விழா
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேலான அறிவுரைகளின் படி, "முகஅடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்கவிழா” திருச்சி மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்தார். பின்னர் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்ட அரங்கத்தில், மேற்குறிப்பிட்ட முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் விளக்கமாக எடுத்துக்கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசினார்.
இந்த FRS மென்பொருளானது ஒரு தனிநபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. இந்த மென்பொருளை காவல் நிலையத்தில் இணையதள வசதியுள்ள கணிணியிலும், களப்பணியின் போதுகைப் பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம்.
இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலையவழக்கில் தொடர்புடையவராக இருந்தால் இச்செயலியின் மூலமே சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியை பயன்படுத்தி காவல் அலுவலர்கள் ரோந்துபணி, வாகன தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போது குற்றவாளிகள்/சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்ற பின்னணியையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்களின் மீது பிடியாணை நிலுவையில் உள்ளதா என்பதை கண்டறிந்து, கைது செய்து நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும். இந்த FRS செயலியானது குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத்தடுப்புவழிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn