பெண்ணின் வயிற்றில் இருந்த 8 கிலோ கட்டி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றி சாதனை படைத்துள்ளனர். கரூர் மாவட்டம் நெய்தலூர் காலனியை சேர்ந்த l காளியம்மாள். வயது (43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று மாத காலமாக தனது வயிறு வீங்கி இருப்பதாலும், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிரமம் இருப்பதாலும் 16.2.2022 அன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் குழு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து பார்த்ததில் கர்ப்பப்பையில் மிகப்பெரிய கருப்பை நார்த்திசு கட்டி ( Fibroid) ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர். K.வனிதா வழிகாட்டுதலின்படி மகப்பேறு துறை தலைவர் மரு. உமா மோகன்ராஜ் மற்றும் மயக்கமருந்து துறை தலைவர் மரு. சிவகுமார் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் இணை பேராசிரியர் மருத்துவர் P. பாக்கியவதி தலைமையில் உதவி மருத்துவர்கள் V. உமா மகேஸ்வரி, நந்தகுமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் P.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு 4.3.2022 அன்று 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதில் 40 சென்டிமீட்டர் நீளமும் 30 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட 8 கிலோ எடை உடைய கட்டியை அகற்றினர். 19.3.2022 அன்று பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளார். இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனையில் 3 லட்சம் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO