இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல்

ஒரு மனிதனின் குணம்; முன்பின் தெரியாதவரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து நமக்கு தெரிய வரும். நம் இடம் தேடி, இல்லம் தேடி, வருபவர்களை கவனிப்பதில் நம் அன்பு வெளிப்படும். நம் முன்னோர்கள் இதனை விருந்தோம்பல் கலாச்சாரமாகவும் பண்பாடாகவும் நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இன்றைய காலத்தில் விருந்தோம்பல் மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது, மக்களிடையே பேசும் பழக்கமும் இன்று மாறிக் கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலில் ஒரு வழிப்போக்கர் வழி கேட்டால் கூட நாம் சரியாக உதவாத நிலையில் இருக்கிறோம், வீட்டுக்கு வருபவர்களை வேண்டா வெறுப்பாகத்தான் கவனித்துக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய விருந்தோம்பலை இலக்கியம் வாயிலாக சுட்டிக் காட்டி நினைவூட்டுவதே இந்த தொடரின் நோக்கமாகும். நமது முன்னோர்கள் அற்புதமாக விருந்தோம்பல் உபச்சாரம் செய்திருக்கிறார்கள், அதற்கு ஒரு உதாரணம் தான் திண்ணை கட்டி வாழ்ந்தது. குறிப்பாக, விருந்தினர் என்பவர் முன் பின் தெரியாதவர் என்பதையேநாம் எல்லோரும் மறந்து விட்டோம் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் வந்தால் அவர்களையே விருந்தினர்கள் என்று அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

நான் என்ன விருந்தாளியா நான் சொந்தகாரன்டா, என அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி என்று பெரியவர்கள் நம்மிடம் கூறிய காலங்கள் நினைவிருக்கிறதா? முன்பின் தெரியாதவர்கள் வந்து இருந்து உண்டு உறங்கி செல்வதற்காகத்தான் திண்ணை கட்டி இருந்தார்கள் நமது பெரியவர்கள், நம் இல்லம் தேடி வரும் விருந்தினரை கவனிப்பதற்கு பல்வேறு இலக்கிய குறிப்புகள், உதாரணங்கள் மற்றும் இலக்கியப் பதிவுகள் நம்மிடம் இருக்கிறது அதில் ஒன்றுதான் விவேக சிந்தாமணியில் இருந்து நாம் எடுத்துள்ள பாடல். ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும் என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.

ஆம், முகமலர்ச்சியுடன் மனதார நம் விருந்தினரு க்கு உபசரிப்பு செய்தால்அது உப்பு இல்லாத கூழாக இருந்தாலும் விருந்தினருக்கு அது அமிர்தமாகவே இருக்கும் என்கிறது விவேக சிந்தாமணி. இதோடு நிற்காமல் இந்த பாடலின் பிற்பகுதியில் விவேக சிந்தாமணி கூறும் கருத்து நம் இன்றைய நிலைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. முப்பழமொடு பாலன்னம் முகம் கடுத்திடுவாராயின் கப்பிய பசியுடனே கடும்பசி ஆகும் தானே என்கிறது விவேக சிந்தாமணி. இப்போதெல்லாம், ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் ஸ்மைல் என்பார்களே அதுதான் அதிகமாக இருக்கிறது.

வரும் விருந்தினருக்கு வேண்டா வெறுப்பாக உபசரிப்பதே இன்று நம்மில் பலரிடம் வழக்கமாகிவிட்டது என்பதைத்தான் விவேக சிந்தாமணி அன்றே கூறியிருக்கிறது. மா, பலா, வாழை என்ற முப்பழமும் பாலும் சோறும் கலந்து நாம் மனதார கொடுக்காமல் முகம் கடுத்து மனம் கடுத்து நாம் செய்யும் உபசரிப்பு இருந்தால், இதற்கு நாம் சாப்பிடாமலேயே சென்று விடலாமே, நமது பசி இன்னும் கடும் பசி ஆனாலும் பரவாயில்லை என்றே விருந்தினர்கள்எண்ணுவார்கள் என்கிறது இப்பாடல்.

இதிலிருந்து நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது ஒன்றுதான், வரும் விருந்தினர்களை நாம் மனதார வரவேற்போம் அவருக்கு என்ன கொடுக்கிறோம் என்பதைவிட, நாம் அவர்களை கவனிக்கும் விதம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம், மனிதம் தழைக்க விருந்தோம்பல் நினைவுகூர்வோம், தொடர்வோம்.

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி,

உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும்.

முப்பழ மொடு பாலன்னம் முகம் கடுத்து இடுவராயின்

கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே-விவேக சிந்தாமணி

தொகுப்பாளர் தமிழூர் கபிலன், விருந்தோம்பல் பயிற்சியாளர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision