குழந்தைகளை பன்மொழியாளர்களாக மாற்றுவது எப்படி
இன்றைய காலப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பன்முக திறமையாளராக இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள் குறிப்பாக பல மொழிகளை கற்றுத் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பன்மொழியாளர்களாக மாற்றலால் என்பதை இத்தொடரில் காண்போம் ...
உணர்வுகளை வெளிப்படுத்தவும், சமூகத்தோடு தொடர்புகொள்ளவும், பிறருடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் மொழிதான் அடிப்படையாக அமைகிறது, குழந்தைகளைப் பொறுத்தவரை தாய் மொழி உட்பட, எந்த ஒரு மொழியையும் முதலில் ஒலி வடிவமாகத்தான் அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மொழியின் ஒலியைத் தொடர்ந்து கேட்கும் பொழுதும், அதே சூழலில் தொடர்ந்து வளரும் பொழுதும், அந்த மொழியைப் பேசும் நபர்களோடு தொடர்ந்து பழகும் வாய்ப்பு கிடைக்கும் போதுதான் குழந்தைக்கு அந்த மொழியோடு நெருக்கம் ஏற்பட்டு அந்த மொழியைப் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, திறன் சார்ந்த செயல்பாடுகள்தான் அவர்களின் மொழி வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
குழந்தையின் மூளை வளர்ச்சி அவர்களின் பத்து வயதுக்கு 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும். எனவே அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின் 7 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்டமொழியைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். அதற்காக மொழியைக் கற்றுக்கொடுக்கிறோம் பேர்வழி என்று குறிப்பிட்ட மொழியில் உள்ள கதை புத்தகங்கள், கார்ட்டூன் சி.டிக்கள் என வாங்கிக் குவித்து மொழியைக் குழந்தையின் மூளையில் திணிக்கக் கூடாது. இதனால் குழந்தைகளுக்கு மொழியின் மீது வெறுப்பு ஏற்பட்டு, அந்த மொழியை விட்டு எவ்வளவு தூரம் ஓட முடியும் என்றுதான் நினைப்பார்கள்.
பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பட்சத்தில் அவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். பயிற்சி வகுப்பில் சேர்க்கிறீர்கள் எனில் பயிற்சியாளர் அந்த மொழியில் வல்லுநர்தானா?என்பதை உறுதி செய்து குழந்தைகளைச் சேர்த்துவிடவும். உங்கள் குழந்தை வேற்று மொழிப் பயிற்சிக்குச் செல்லுகிறார்கள் எனில், அவர்களிடம் மதிப்பெண் முக்கியம் இல்ல, நீ அந்த மொழியைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளுவதுதான் முக்கியம் என்பதைக் கூறி, மொழி பற்றிய புரிதலை ஏற்படுத்துங்கள். இவை எல்லாவற்றையும் தாய் மொழியை குழந்தை மறக்காமல் பழக்க வேண்டும்.
எல்லா மொழிகளும் தனக்கான ஒரு தனித்தன்மை கொண்டது என்பதை சிறு வயதிலிருந்தே உணர்த்துதல் நல்லது. பயிற்சி செய்து பாருங்கள். இனி உங்கள் குழந்தையும் பன்மொழியாளர் தான்!"
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision