மனிதம் மரிக்கவில்லை!மரித்தவர்களை மரியாதையுடன் அடக்க செய்யும் அமைப்பினர்!!
கொரோனா நோய் தொற்றால் அதிகமான பேர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் தினமும் நான்கு இலக்க எண்களில் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் வெளியாகி கொண்டே வருகிறது.தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வினோதமாக பார்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அயராமல் அடக்கம் செய்து வருகின்றனர் திருச்சியை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்! இவர்களைப் பற்றிய சிறப்பு தொகுப்பு வெளியிடுகிறது திருச்சி விஷன் குழுமம்.
திருச்சியை பொறுத்தவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திருச்சியின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை ஹிந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என அவர்களுடைய இறுதி சடங்கின் படியே அடக்கம் செய்து வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உறவினர்கள் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடைய ஆம்புலன்சில் ஏற்றி இலவசமாக உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் V. முஜிப் ரகுமானிடம் பேசினோம்… "இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எங்களது அமைப்பின் சார்பாக கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வருகின்றோம். திருச்சியை பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 6 பேரை நல்லடக்கம் செய்துள்ளோம். இதில் 2 இந்துக்கள், 2 கிறிஸ்தவர்கள், 2 முஸ்லிம்கள் என அவர்களுடைய முறைப்படியே இறுதி சடங்கை செய்தோம். நாங்கள் திருச்சியிலுள்ள அனைத்து கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் நோய் தொற்றால் உயிரிழந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றோம். இதற்கு ஆகும் மொத்த செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் உடுத்தும் PPE கிட்டுகளையும் அமைப்பின் சார்பாக எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒருமுறை PPE பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்த 3000 முதல் ஒரு உடலை அடக்கம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதனை எங்களது அமைப்பை ஏற்றுக் கொள்கின்றோம். ஒருவருக்கு பயன்படுத்திய PPE கவச உடைகளை பாதுகாப்பான முறையில் எரித்தும் மற்றும் புதைத்து விடுகிறோம். மேலும் இதில் அடக்கம் செய்தவர்கள் வீட்டிலேயே எங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றோம். மனிதாபிமானம் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து அயராது இப்பணியைச் செய்து வருகிறோம் என்றார்" புன்னகையுடன்..
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அவர்களுடைய உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கின்றனர் இந்த அமைப்பினருக்கு! எதையும் எதிர்பாராமல் மனிதாபிமானம் ஒன்றையே அடிப்படையாக கொண்டு செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP